பக்கம் எண் :

9

தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்

      எப்போதும், அண்மையிருப்பு அன்புறவையும் சேய்மையிருப்பு அயன்மை பகையையும் காட்டா. ஒருவர்க்கு அடுத்த வீட்டார் பிறவிப் பகைவராகவும் அயல் நாட்டார் உயிர் நண்பராகவும் இருக்கலாம்.
உள்ளூ ரிருந்துந்தம் உள்ளத்தன் பில்லாரேல்
கள்ளவிழ் சோலையாங் காட்டுள்ளார் காட்டுள்ளும்
உள்ளத்தன் புள்ளாரேல் உற்றார்வாழ் நாட்டுள்ளும்
நள்ளி நடுவூ ருளார்.

(214)

என்பது அறநெறிச்சாரம்.
      ஒரு நாட்டு அல்லது இனத்து மக்களின் உள்ளத்தெழுங் கருத்து களைத் தெரிவிக்கும் சொற்றொகுதியே மொழியாதலின், இங்கு மக்களுக்குச் சொன்னது மொழிகட்கும் ஒக்கும்.
      ஆங்கிலம் ஏறத்தாழ ஆறாயிரம் கல்லிற்கு அப்பாலுள்ள அயல் நாட்டு மொழியாதலாலும், வடமொழி நம் நாட்டிலேயே தோன்றி வழங்கி வருவதாலும், ஆங்கிலம் தமிழுக்கு அயலென்றும் வடமொழி தமிழுக்கு உறவென்றும், ஒரு தவறான கருத்து இருந்துவருகின்றது.
ஆங்கிலத்தின் உண்மை வெளியீடும் வடமொழியின் உண்மை மறைப்பும்:
      ஆங்கிலர் 16ஆம் நூற்றாண்டிலிருந்து கலத்துறையிற் சிறந்து கடல் கடந்து, உலகத்தின் பல பகுதிகளிலும் தம் ஆட்சியை நிறுவினதினால், ஆங்காங்குள்ள மக்களின் மொழிகளினின்று வேண்டுமளவு சொற்களைக் கடன் கொண்டு தம் மொழியை வளப்படுத்தியுள்ளனர். இவ் வுண்மையை அவரே தம் சொற்களஞ்சியங்களில் (அகராதிகளில்) தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
      எ-கா :
       அணைக்கட்டு - anicut
       ஆனைகொன்றான் - anaconda
       கட்டுமரம் - catamaran
       தேக்கு - teak