| "ஓங்க லிடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்" | |
என்று தமிழின் உலக முதன்மையையும் இலக்கிய முன்மையையும், பலபடப் பாராட்டிச் சென்றனர். |
இங்கிலாந்தினின்று தென்னாடு வந்து வாழ்நாள்முழுதும் தமிழையும் திராவிட மொழிகளையும் கற்றாய்ந்த கால்டுவெல் கண்காணியாரும், தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவும், தழைத்தோங்கவும் வல்லதென்றும், திராவிட மொழிக்குடும்பம் உலக முதன் மொழிக்கு மிக நெருங்கியதென்றும் மக்களின் முதற் பெற்றோர் மொழியினின்று வழிவழி வந்து வழங்கும் ஒரு சொற்றொகுதியைத் தன்னகத்துக் கொண்டுள்ள தென்றும், தெளிவாகக் கூறியுள்ளார். |
இங்ஙனமிருந்தும் சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஒரு புன்சிறு புதுக்கலவை மொழியினும் தாழ்வாகக் கருதப்பட்டுவருகின்றது; இலக்கண விலக்கியச் செம்மை நிரம்பி எண்டிசையும் பரவி என்றுமுள தென்றமிழ்க்கு இவ் விழிதகவைப் போக்கி, அதனை மீண்டும் அரியணையில் அமர்த்துதற்கே எழுந்தது இவ்விதழ். |
குல மத கட்சி நிலச் சார்பின்றித் தூய மொழித்தொண்டே இவ் இதழ் மேற்கொண்டுள்ளமையின், அகம், நாடு, புலம், பொழில், வரைப்பு முதலிய இடப்பொரு ளீறின்றித் தூய மொழிப் பெயரே இதற்கு இடப்பெற்றுள்ளது. |
தயிர் பாலினின்று திரிந்துள்ளதுபோல் திரவிட மொழிகள் தமிழினின்று திரிந்து ஓரளவு ஆரியத் தன்மை அடைந்துவிட்டமையாலும், வடவேங்கடந் தென்குமரி யிடைப்பட்ட பண்டைத் தமிழ்ச் சொற்களே, தென்னாட்டுத் திரவிட மொழிகளில் சிறப்பாகப் பழஞ் சேரநாட்டு மொழியாகிய மலையாளத்தில் அடிப்படையாக மண்டிக்கிடப்பதாலும், இற்றைச் சோழ பாண்டி நாட்டு மொழியையும் தென்னாட்டுத் திரவிடத்தின் தமிழ்ப் பகுதியையும் ஒருங்கே தழுவுதற்கே 'தென்மொழி' யென்னும் பெயர் இவ்விதழிற்கு இடப்பெற்றதென்க, |
ஆகவே 'தமிழ்' என்பது தமிழை மட்டும் குறிக்குமென்றும், 'திரவிடம்' என்பது தமிழினின்று திரிந்த பிறமொழிகளையே குறிக்கு மென்றும், 'தென்மொழி', என்பது அவ்விரண்டையும் குறிக்குமென்றும் வேறுபாடறிந்து கொள்க. |
- தென்மொழி (1.8.1959) |