பக்கம் எண் :

7

தென்மொழி

       சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்த மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்,
"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே"
       என்று தமிழின் திரவிடத் தாய்மையையும்,
       பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திலங்கிய சிவஞான முனிவர்,
"இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ்
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ?"
       என்று தமிழின் சமற்கிருதத்திற்கொத்த தன்மையையும்,
       பதினேழாம் நூற்றாண்டில் வதிந்திருந்த கருணைப்பிரகாசர்,
"மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரைநாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்"
       என்று தமிழ் ஆரியத்திற் கொப்பாயிருப்பதோடு அதனொடு மாறுபட்டு உயர்விற்குப் போராடு நிலையையும்,
       பதினாறாம் நூற்றாண்டில் திகழ்ந்திருந்த திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்,
"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்பல கிடந்ததா எண்ணவும் படுமோ!"
       என்று தமிழுக்கு வடமொழிக்கில்லாத இலக்கண வரம்புண்மையையும், ஒரு பழந்தமிழ்ப்புலவர்,