பக்கம் எண் :

6தமிழியற் கட்டுரைகள்

நாகரிக மாந்தன் எவ்வினை செய்யினும், திருந்திய முறையிலேயே செய்தல் வேண்டும்.
     மொழிக்குச் செம்மை வரம்பிடாது வாய்போன போக்கெல்லாம் பேச்சுத் திரியவிடின், அது சண்டிக் குதிரைபோல் ஓரிடத்து நில்லாது காடுமேடாய் இழுத்துச் செல்லும்; இறுதியிற் குழிக்குள்ளும் தள்ளும். புதுப்புது நடை தோன்றிப் பழநடை வழக்கு வீழும். பண்டை இலக்கியம் பயனற்றுப் போம். ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட ஆங்கில இலக்கியம், இன்று ஆராய்ச்சியாளர்க்கே பயன்படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலக்கியமோ, இற்றை யிலக்கியம்போல் எல்லார்க்கும் பயன்படுகின்றது. ஆதலால், செந்தமிழ் மரபை எத்துணைப் பாடுபட்டும் பொருட் செலவிட்டும் போற்றிக் காத்தல் வேண்டும்.
  "நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்"

(தொல். மரபியல்.90)

  "மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்."

(தொல்.மரபியல்.92)

     ஆரியரால் மூவாயிரம் ஆண்டும், அயலரசுகளால் முந் நூறாண்டும், வையாபுரிகளால் ஐம்பானாண்டும் சிதைக்கப்படினும், இன்றும் தமிழை அழியாது காத்தது அதன் செம்மை வரம்பே. தமிழ் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற தனிமொழி. அதன் உயிர்நாடித் தன்மை தூய்மை.

- தாமரைச் செல்வர் வ.சுப்பையா பிள்ளை
பவள விழா மலர் 1973