| இரண்டறக் கலக்கும் காதலுக்கு உணர்ச்சி போதுமெனச் சொல்லவும் வேண்டுமோ? |
| காதல் வாழ்க்கைக்கு அல்லது உண்மையான மணவாழ்க்கைக்கு, வாயிலும் கரணமும் இன்றியமையாது வேண்டுப வல்ல. |
| | "கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில" | (குறள். 1100) |
| என்றார் திருவள்ளுவர். |
| கோவையில் முதலாவது கூறப்படும் இயற்கைப் புணர்ச்சி, தலைவனுந் தலைவியும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே தமியராய்க் கூடிப் புணரும் தெய்வப் புணர்ச்சியே. அதன்பின் அத்தகைப் புணர்ச்சிக்கு இடமின்மையானேயே, பாங்கனும் பாங்கியுமாகிய வாயில்கள் வேண்டப்படுகின்றன. அவ் வாயில்களாலும் இயலாதவழி கற்பு அல்லது கரணம் வேண்டப்படுகின்றது. |
| உண்மையான கற்பாவது களவு வெளிப்பாடே யன்றிக் கரணமன்று. முதற்காலத்தில் கரணமில்லாமலே மக்கள் இல்லறம் நடாத்தி வந்தனர். மகப்பேறு காதலை வெளிப்படுத்திவிடு மாதலின், வாழ்நாள் முழுதும் களவொழுக்கம் இயலுவதன்று. ஆகையால், முன்பு களவும் பின்பு கற்புமாக மணவாழ்க்கை இரு பகுதிப்பட்டது. |
| பருவ மகனும் மகளும் முதலாவது கூடுங் கூட்டம், காமப் புணர்ச்சி, காதற் புணர்ச்சி என இரு வகைப்படும். இவற்றுள் முன்னது காமத்தால் மட்டும் நிகழ்ந்து பின்பு தீர்வது; பின்னது காமத்தோடு கூடிய அன்பால் நிகழ்ந்து காலமெல்லாம் நீடுவது. இது எண்ணாது (தெய்வத்தால்) நிகழ்வதும் எண்ணி நிகழ்வதும் என இரு வகைத்து. இவ் விருவகையிலும் காதல் கரைபுரண்டோடி எத்துணைத் தடைகளையுந் தகர்த்தெறிந்து இறுதிவரை இன்பஞ் சிறப்பதே. முதற்காலத்தில் நடந்த களவெல்லாம் காதற் புணர்ச்சி யாகவே யிருந்தது. பின்பு, இடைக்காலத்தில் சில பல களவுகள் காமப் புணர்ச்சியா யொழியவே, முனிவரால் கரணம் விதிக்கப்பட்டது. |
| | "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரண மென்ப" | (தொல். பொருள். கற். 4) |
| ஆயினும், கரணத்தால் மட்டும் பொய்யும் வழுவும் தீர்ந்துவிடாது. உண்மையான காதல் வாழ்க்கை கரணமற்றதேனும் பழிக்கப்படாது. அலங்காரமும் மக்கட் கூட்டமும் இன்னிசையும் உண்டாட்டும் ஊர்வலமும் வரிசையளிப்பும் ஆகிய ஆரவாரமே கரணத்தைச் சிறப்பிப்பது. இவ் வாரவாரம் சற்றும் அற்றதாயின் கரணமும் பொதுமக்களால் சிறிது பழிக்கப் படுவதே. கரணத்தின் வழிப்பட்ட வாழ்க்கையிலும் பொய்யும் வழுவும் தோன்றுமாயின் அதுவுங் கரணமற்றதே. கரணவழிப்பட்ட பல இல்லற வாழ்க்கையில் பொய்யும் வழுவும் இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். |