பக்கம் எண் :

உரையாசிரியர்கள்130

          காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
         ஆய்தல் அறிவுடையார் கண்ணதே-காய்வதன்கண்
         உற்ற குணம்தோன்றா தாகும் உவப்பதன்கண்
         குற்றமும் தோன்றாக் கெடும்
                                       -அறநெறிச்சாரம் - 23

நடுநிலைமை

    விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் இருந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு,
குற்றமும் குணமும் நாடி மதிப்பிட்ட திறனாய்வாளர்கள் உரையாசிரியர்கள்.
சமயப்பற்று மிகுந்திருந்த காலத்தில்-சமயமே வாழ்வின் உயிர் என்று கருதிய
மக்கள் நடுவில்-தம்மை ஆதரிக்கின்ற புரவலர் கருத்திற்கு மாறுபடும் சூழலில்
வாழ்ந்து கொண்டு உரையாசிரியர்கள் நடுநிலைமை தவறாமல் திறனாய்வுப்
பணியாற்றினர்.

     சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட அரும்பத வுரையாசிரியரும்,
அடியார்க்கு நல்லாரும் எல்லாச் சமயத்தையும் ஒரே வகையாய் நோக்கி,
அந்த அந்தச் சமயங்களுக்குரிய தெய்வங்களையும் சமயச் சான்றோர்களையும்
போற்றி மரபு மாறாமல் உரை எழுதியுள்ளனர். சைவராகிய நச்சினார்க்கினியர்
ஜைன காப்பியமாகிய சீவகசிந்தாமணிக்கு மிகச் சிறந்த உரை எழுதினார்.
ஜைனப் புலவர் பவணந்தியாரின் நன்னூலுக்குச் சைவராகிய சங்கர
நமசிவாயரும் சிவஞான முனிவரும் நல்லுரை கண்டுள்ளனர்.
உரையாசிரியர்கள், தாம் எந்தச் சமயத்தவர் ஆயினும் தாம் உரை எழுத
மேற் கொண்ட நூல்களின் சமயக் கருத்துக்களைத் தெளிவாக அறிந்து
விளக்கினர்.

     இருபதாம் நூற்றாண்டில் டாக்டர் உ,வே. சாமிநாத ஐயர் நடுநிலைமை
தவறாதவராய் விளங்கினார். தாம் சைவராய் இருந்தும் பல வேறு சமய
நூல்களைப் பதிப்பித்தார். அந் நூல்களில் உள்ள சமயக் கருத்துக்களை
அறியப் பெரிதும் முயன்றார்; நன்றாக அறிந்து தெளிவு பெற்ற பின்னரே
விளக்கம் எழுதினார். அவர் பதிப்பித்த நூல்களில் சீவக சிந்தாமணி,
நன்னூல் மயிலை நாதர் உரை ஆகியவை ஜைன சமயத்தவர் படைத்தவை.
மணிமேகலை பௌத்த சமய நூல். இவற்றில் பிற சமயத்தவர் கொள்கைகளை
மறுக்கும் இடங்கள் பல உள்ளன. இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாமல்
அவற்றிற்கு விளக்கம் எழுதிப் பதிப்பித்தார். டாக்டர் உ.வே.சா. தலைசிறந்த
சைவப் பெரியாரிடம் கல்வி பயின்றவர்; சைவக் குடும்பத்தில் பிறந்து
வளர்ந்தவர்; கடைசிவரை சைவ சமயப்பற்று உடையவராய் வாழ்ந்தவர்.
அவர் வாழ்ந்த காலம், சுற்றுச் சூழல்,