இருந்த பொருந்தா உரைகளை மறுக்கின்ற இடங்களில் ‘இது ஆசிரியர் கருத்தன்று’; ‘இது, ஆசிரியர் கொள்கைக்கு முரண்’ என்று தக்க சான்று காட்டியுள்ளனர். அதிவீரராம பாண்டியன், நூல்பல கற்றா னேனும் பொருள்நுனித் தறியான் என்னில் மாலொடு வாளா கத்தும் மால்நிறக் காகம் போல்வான் என்றும்; பாரதியார், அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் (சுயசரிதை-23) என்றும் கூறியுள்ள கருத்துக்கள் உரையாசிரியர்களின் உள்ளத்தில் நிலவி வந்தன. திருவள்ளுவர் நூலின் பொருளை நுனித்து அறிந்து, ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்ட பரிமேலழகர், ‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கும் இயல்பு’ (குறள்-322) என்று கூறியுள்ளார். சான்றோர் நூல் முற்காலத்தில் நாடறிந்த பெரும் புலவர்கள்-கற்றுத் தேர்ந்த புலமைச் செல்வர்கள்-தாம் கண்டறிந்த பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தி, மக்களை வாழ்விக்க எண்ணி நூல் இயற்றும் பணியில் ஈடுபட்டனர். பல காலம் முயன்று எழுதிய விழுமிய நூலைச் சான்றோர் நிறைந்த மன்னர் பேரவையில் அரங்கேற்றினர். அரங்கேற்றும்போது நூலைப் பற்றிச் சான்றோர் ஐயங்களை எழுப்பி, குறை நிறை கண்டு அந்நூலைத் தேர்ந்தெடுத்தனர். பின்னரே அந்நூல் நாட்டு மக்களிடையே பரவியது. குற்றமுள்ள நூல் அரங்கேற்றத்தின் போதே தடை செய்யப்பட்டது. குற்றங்குறை உள்ள பகுதிகள் நீக்கப்பட்டன; திருத்தப்பட்டன. அரங்கேறாத புதுநூல் நாட்டில் தலை காட்ட முடியாத சூழல் அக் காலத்தில் இருந்தது. எனவே பல நூறு ஆண்டுகள் மக்களிடம் பரவி, கற்றவரால் போற்றப்பட்டு வரும் சிறந்த நூலே உரையாசிரியர்களின் உரையைப் பெற்றது. ஆதலின் மூல நூலில் குறை காணும் நோக்கம் உரையாசிரியர்களிடம் ஏற்படவில்லை. நூலாசிரியர்களிடம் உரையாசிரியர்களுக்கு அளவற்ற மதிப்பு உண்டு. |