வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்பது அவர்கள் கருத்து. நூலாசிரியர்களை உரையாசிரியர்கள் பின்வருமாறு போற்றியுரைக்கின்றனர்: ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் -மயிலை நாதர். வள்ளுவக் கடவுள் பல்கலைக் குரிசில் பவணந்தி -சங்கர நமசிவாயர். நூலாசிரியர்களிடம் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்த உரையாசிரியர்கள், தம் காலத்திற்கு முரணான கருத்துக்கள் மூல நூலில் இருப்பினும் அவற்றிற்கு அமைதி கூறினர். வழுவமைதி காட்டி மேற்கொண்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று, தம காலத்தில் நிலவி வந்த புதுக் கருத்துக்களையும், புது மரபுகளையும் ‘மிகை’யினாலும் ‘உரையிற் கோடல்’ என்பதனாலும் தம் உரையில் சேர்த்து எழுதி நூலாசிரியர்களுக்குப் புகழ் தேடினர்; நூலாசிரியர் சொல்லாத கருத்து எதுவும் இல்லை என்று உணர்த்த முற்பட்டனர். தொல்காப்பியம் செய்யுளியலில் யாப்பருங்கலத்தின் கருத்தையும், உவமையியலில் அணி நூற் கொள்கையையும் உரையாசிரியர்கள் இடையிடையே புகுத்தி இருப்பது இங்கே நினைவுக்கு வருகின்றது. திருக்குறள் உரையாசிரியர்களும் தம் கருத்தை உரைகளில் புகுத்திய இடங்கள் பல உள்ளன. தம் கருத்திற்கு மாறானவற்றை நூலாசிரியர் கூறி இருப்பினும் உரையாசிரியர்கள் அவற்றை மறுப்பதில்லை. பெரியோர் பாட்டில் பிழை கூற - சான்றோர்களைக் குறை கூற அவர்கள் அஞ்சினர். இராமலிங்க அடிகள், ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்னும் உரைநடை நூலில், மகனை முறை செய்த சோழன், தன் மகன் ஆவின் கன்றைக் கொல்லக் காரணமாய் இருந்தமைக்குப் பெரிதும் நொந்து, “நான் இதற்கு, முன் என்ன தீவினை செய்தேனோ! எனக்கு இத்தகைய பழி நேர்ந்ததே!” என்று கூறும்போது, “பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ!” என்று உரைப்பதாய் அமைத்துள்ளார். பெரியோர் பாட்டில் பிழை காண்பது கொடிய செயல் என்ற வள்ளலாரின் கருத்து இங்கே வெளிப்படுகின்றது. |