குறையறிதல் வள்ளலாரைப் போன்றே உரையாசிரியர்கள் அனைவரும் பெரியோர் பாட்டில் பிழை சொல்ல அஞ்சினர். ஆனால், அவர்களிடம் மற்றொரு பண்பு இருந்தது என்பதை இங்கே மறந்துவிடக் கூடாது. தாம் உரை எழுத மேற் கொண்ட ஒப்புயவர்வற்ற நூல்களில் - தெய்வப் புலமை வாய்ந்தவராய்த் தாம் மதிக்கின்ற சான்றோர் செய்த நூல்களில் உள்ள கருத்துக்கள் யாவும் மாசு மறுவற்றவை என்றோ, குற்றம் குறை இல்லாதவை என்றோ, மாறுபாட்டிற்கு இடம் இல்லாதவை என்றோ உரையாசிரியர்கள் கருதியதில்லை. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு என்ற திருவள்ளுவர் வாக்கு அவர்கள் உள்ளத்தில் எப்போதும் எதிரொலித்த வண்ணமாய் இருந்தது. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் (பாயிரவியல்-6), நூல்உரை போதக ஆசிரியர் மூவரும் முக்குண வசத்தான் முறைமறந்து அறைவரே என்று கூறுகின்றார். உரையாசிரியரைப் பற்றி, நூலா சிரியர் கருத்தினை நோக்காது ஒருசூத் திரத்திற்கு ஒவ்வோர் ஆசிரியர் ஒவ்வொரு மதமாய் உரைவகுக் குவரே என்றும், உரைக்கு விளக்கம் கூறுவோரைப் பற்றி, அவ்வுரை அதனுள் அடுத்த வாசகங்கட்கு அவர்கருத்து அறியாது அவரவர் கருத்தினுள் கொண்ட பொருள்படப் பொருள் கூறுவரே என்றும் கூறி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார். அவரே தம் நூலில் மற்றோரிடத்தில், “இறைவன் நீங்கலான எல்லா ஆசிரியர்க்கும் ‘மறவி இனைய உடல்கொள் உயிர்க் குணம்’ என்பதனாற் பொது. அவரவர் மறவிகளை விரிக்கின் பெருகுதலானும், அறிதல் அருமையானும், பெரியார்க்குக் குற்றம் கூறினான் என்னும் குற்றம் வருதலானும் விரித்திலம் என்க” (இலக்.89) என்று கூறுகின்றார். இத்தகைய கருத்துத் தெளிவு, எல்லா உரையாசிரியர்களிடமும் உள்ளது. தொல்காப்பியரின் தெய்வப் புலமையைப் போற்றி வியந்த உரையாசிரியர்கள், அவரது நூலில் உள்ள முரண்பட்ட கருத்துக்களை உணர்ந்து கூறியுள்ளனர். சேனாவரையர், ‘எல்’ |