புரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் பட்ட தொல்லைகளை நாமும் நமக்குப் பின்னால் வருபவர்களும் படக்கூடாது என்று ஒவ்வோர் ஆய்வாளரும் எண்ணிச் செயலாற்றவேண்டும். உரைகளில் கருத்துச் சுரங்கம் உள்ள இடங்களையும், புதிய சிந்தனை உள்ள பகுதிகளையும், சமன் செய்ய வேண்டிய மேடு பள்ளங்களையும், நிரவல் செய்ய வேண்டிய கரடுமுரடான தடங்களையும் புதிய பாதை அமைக்கவேண்டிய இடங்களையும் அடையாளம் காட்டுவது ஆய்வாளரின் கடமையாகும். தரையில் கொட்டிக் கிடக்கின்ற செங்கற் குவியல்களில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் கைமாறிமாறி உயரச்சென்று கட்டடக் கலைஞர்களிடம் போய் உயரமான கோபுரம் உருவாவதைப்போல், காலந்தோறும் தோன்றியுள்ள உரைகளில் சிதறிக் கிடக்கின்ற சிந்தனைச் செல்வங்கள் ஆய்வுலகில் மேலே சென்று புதிய கோட்பாடுகள் உருவாக வேண்டும். நமக்கு முன்னே குவிந்து கிடக்கும் பழம் பெருஞ் செல்வங்களாகிய உரைகளைப் பற்றிய முறையான ஆய்வுகள் தோன்றி வளரத் தொடங்கிவிட்டன. அவை இன்னம் வளரும்; இனியும் வளரும்; வளர்ந்து எல்லையற்ற தொடுவானம் போல நீண்டு சென்று கொண்டே இருக்கும். இன்னும் நீண்டவழி போக வேண்டும், அம்மா ! -கவிமணி |