பக்கம் எண் :

153

1

இலக்கண உரையாசிரியர்கள் - I


1. இறையனார் அகப்பொருளுரை 

    உரைகளில் காலத்தால் முற்பட்டது ‘இறையனார் அகப் பொருளுரை’
யாகும். இதுவே தமிழில் தோன்றிய முதல் உரைநூல். பின்னர்த் தோன்றிய
மற்ற எல்லா உரைகளுக்கும் இது வழிகாட்டியாய் விளங்குகின்றது. இந்த
உரையிலிருந்து, உரைகளைப் பற்றிய பல பொதுவான செய்திகளை அறிந்து
கொள்ளலாம். இது மிகச் சிறந்த இலக்கியமாய் அமைந்து, கற்போர்க்குப்
பேரின்பம் தருகின்றது.

     ‘இறையனார் அகப்பொருள்’ சிறந்த அகப் பொருள் இலக்கண நூல்.
இதனை இறையனார் களவியல் என்றும் வழங்குவதுண்டு. களவியல் என்பது
சிறப்பினாற் பெற்ற பெயர் என்றும், ‘களவு கற்பு என்னும் கைகோள்
இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன்’
என்றும் இந்நூலின் உரையாசிரியர் கூறுகின்றார். இந்நூல் களவு கற்பு என்ற
இரு பிரிவுகளை உடையது. களவினுள் 33 நூற்பாக்களும், கற்பினுள் 27
நூற்பாக்களுமாக 60 நூற்பாக்கள் உள்ளன. ஒட்டக்கூத்தர், இதனை ‘அமுத
சூத்திரம் அறுபதாய்ச் சமை நூல்’ என்று போற்றியுள்ளார்.*

     இந் நூலை இயற்றியவர் இறையனார். இறையனாரை இந் நூலின் உரை,
மதுரை ஆலவாய்ச் சோமசுந்தரக் கடவுள் என்று குறிப்பிடுகின்றது. நூல்
தோன்றிய வரலாற்றை, “அக்காலத்துப் பாண்டியனும் சங்கத்தாரும்
பொருளிலக்கணம் பெறாது, இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற்பெருமான்
அடிகளால் வெளிப்படுத்தப்பட்டது” என்று சுருக்கமாகக் கூறுகின்றது.


 * குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் - காப்புச் செய்யுள்.