இந்நூலினை இறையனார் என்னும் பெயருடைய புலவர் இயற்றி இருக்கக்கூடும். இறையனார் என்ற பெயர், நூல் தோன்றிய கதை பிறப்பதற்குக் காரணமாய் இருந்தது எனலாம். குறுந்தொகையுள் (பாடல் 2) இறையனார் என்னும் புலவர் இயற்றிய ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற அகப்பாட்டு, நக்கீரரையும் விரிசடைக் கடவுளரையும் பாண்டியனையும் இணைத்துக் கதை புனைய இடந்தந்தது. அவ்வாறே இந்நூலாசிரியர் பெயரும் கதை தோன்ற இடந்தந்தது. இக்கதை தெய்வத்தோடு தொடர்புபடுத்தி நூலின் பெருமையை மிகுதிப் படுத்த எண்ணிய காலத்தில் உருவாகி இருக்கலாம். நூல் தோன்றிய கதையை விரிவாகப் பின்வருமாறு உரை கூறுகின்றது: “அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, “வம்மின், யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின்” என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய மழை பெய்தது. பெய்தபின்னர் அரசன், “இனி நாடு நாடாயிற்றாகலின், நூல் வல்லாரைக் கொணர்க” என்று எல்லாப்பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைக் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்” என்று வந்தார். வர அரசனும் புடைபடக்கவன்று, “என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே; பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழல்நிறக் கடவுள் சிந்திப்பான்: “என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அது தானும் ஞானத்திடைய தாகலான், யாம் அதனைத் தீர்க்கற் பாலம்” என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்.” இவ்வாறு சோமசுந்தரக் கடவுள் அருளியதாகக் கூறி இந்நூலை, ‘முதல்நூல்’ என்றே உரை குறிப்பிடுகின்றது. ஆனால், இவ் அகப்பொருள் இலக்கணம், தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்துள்ளது. தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் இலக்கணத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இந்நூல் கூறுகின்றது. எனவே, இதனைத் தொல்காப்பியத்தின் வழி நூல் என்பது பொருந்தும். |