உரையின் இயல்புகள் இறையனார் அகப்பொருளுரை சிறப்பியல்புகள் பல வாய்ந்ததாகும். இவ்வுரையை நக்கீரர் இயற்றியதாக உரை தோன்றிய வரலாறு குறிப்பிடுகின்றது. இவ்வுரையைப் படிக்கும் போது, இலக்கண உரையைப் படிக்கின்றோம் என்ற நினைவே எழுவதில்லை. இனிய இலக்கியம் போல், தொட்ட இடமெங்கும் இவ்வுரையில் இலக்கியச்சுவை தேங்கிக் கிடக்கின்றது. எண்ணுந்தோறும் இனிக்கின்ற உவமை, எளிதில் பொருளுணர்ந்து மகிழத்தக்க வகையில் அமைந்த தெளிவான போக்கு, அறிவிற்கு விருந்தாய் உள்ள சிறந்த மேற்கோள், வாகை கூடி வெற்றிப் பெருமிதத்துடன் நடந்து செல்லும் வீரனின் பீடு நடை ஆகியவை யாவும் இவ்வுரையில் கடினமான மறுப்பு, தடை விடை பல எழுப்பி ஆராய்ந்து வலியுறுத்தும் கருத்து, முன்னும் பின்னும் உள்ள கருத்துக்களை நினைவில் கொண்டு பலமுறை ஆழ்ந்து கற்றுத் தெளியும் பகுதி ஆகியவை இவ்வுரையில் இல்லை. தென்றல் தவழும் இனிய மலர்ச்சோலையுள் புகுந்து வண்ண வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் கண்டு மகிழும்போது ஏற்படும் இன்ப உணர்வே, இவ்வுரையைக் கற்கும்போது ஏற்படுகின்றது. இந்நூலைப் படித்துவிட்டு மூடும் போது நம் நெஞ்சத்தில் செந்தமிழ் தந்த இன்பம் மண்டிக் கிடக்கின்றது. நூல் முழுவதும் நூலாசிரியரின் குரலைவிட, உரையாசிரியரின் குரலே மேலோங்கி நிற்கின்றது; உரையாசிரியர் கூறும் கருத்தும் விளக்கமுமே கற்போர் நெஞ்சத்தில் ஆழப்பதிகின்றன. உரையாசிரியர் நம் எதிரே நின்று உரையாடுவது போன்ற மன நிலையை உரையின் வாயிலாக உண்டாக்கிவிடுகின்றார். இவ்வுரையின் நடையழகும், இலக்கியச் சுவையும் காலந்தோறும் புலவர் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. செந்தமிழ் உரைநடை எழுதுவதில் வல்லவராய்-பிறர்க்கு வழிகாட்டியாய் விளங்கிய மறைமலையடிகள் இவ்வுரையைப் பின் வருமாறு போற்றிப் புகழ்கின்றார்: “பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன் மினுக்குப் பூசிப் பல பல அடுக்கு மாடங்கள் உடைத்தாய் வான்முகடு அளாய், காண்பார் கண்ணுங் கருத்தும் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம்போல், ஆசிரியர் நக்கீரனாரது உரை நிவந்து நிற்றலும், அம்மாடத்தின் |