அருகே புல் வேய்ந்த குடிலும், ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழைமைத் தோற்றமும் உடையவாய்த் தாழ்ந்து நிற்றல்போல், இளம்பூரணர் பேராசிரியர் உரைகள் பீடு குறைந்து நிற்றலும், பிரிந்து இனிது விளங்கா நிற்கும்.”1 தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார், இவ்வுரையைச் சிறந்த உரை நடை இலக்கியம் என்று பாராட்டுகின்றார்:2 “நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும் தருக்க நூல் மரபும், இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின் உள்ளத் துணர்வுகளையும் சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும், பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச்சுவை நலமும், உலக வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும் புலப்படுத்தும் நுட்பமும், தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய விளக்கும் திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சீரிய உரைநடை இலக்கியம் இறையனார் களவியலுரை யாகும்.” வழிகாட்டி இவ்வுரையாசிரியர், பின்வந்த உரையாசிரியர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார். பெரும்பாலும் எல்லா உரையாசிரியர்களும் பாயிரம் பற்றி இவர் கூறிய கருத்துக்களையே, இவர் கூறிய முறையிலேயே கூறுகின்றனர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், மயிலை நாதர் ஆகியோர், தாம் எழுதிய உரையின் தொடக்கத்தில் எழுதும், பொதுப் பாயிர விளக்கங்களில் இவ்வுரையாசிரியர் குரலின் எதிரொலியே கேட்கின்றது. இவர் கூறிய பல உவமைகளும் சொற்பொருள் விளக்கமும் பிற்கால உரைகளில் சென்று பரவிச் செல்வாக்குடன் பொலிகின்றன. இவ்வுரையாசிரியரின் உரை நடையைப் பின்பற்றி எழுத முயன்றவர் பலர். ஆனால், அம்முயற்சியில் அவர்கள் வெற்றிபெற முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னரும், இறையனார் அகப் பொருளுரை தலைமையும் பெருமையும் பெற்று, ஈடு இணையற்று விளங்குகின்றது. ‘என்மனார்’ என்னும் சொல்லுக்கு இவர் கூறிய இலக்கணக் குறிப்பை, இளம்பூரணர் அப்படியே மேற் கொள்ளுகின்றார். 1. மணிவாசகர் வரலாறும் காலமும் - பக். 628. 2. இலக்கணச் சிந்தனைகள் (1973) பக். 142, 145. |