பக்கம் எண் :

157ஆய்வு

     முதன் முதலில் அகப்பொருளைக் கற்பனை வளம் செறிந்த இன்ப
நாடகமாக ஆக்கி மகிழ்ந்தவர் இவ்வுரையாசிரியரே. கோவை நூல்களுக்கு
வித்திட்டவர் இவரே. காலமும் இடமும் அமைத்து நாடக
உறுப்பினரைப்படைத்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல நிகழ்ச்சிகளைக் கதைப்
போக்கில் உருவாக்கி இவ்வுரையாசிரியர் காட்டும் திறன் மகிழ்தற்குரியது.

     நம்பி அகப்பொருளும், அதற்குப்பின் தோன்றிய பல அகப்பொருள்
இலக்கணங்களும் இவ்வுரையின் ஒளியால் விளக்கம் அடைந்தன.

உரை தோன்றிய கதை

    நூல் தோன்றியதற்குக் கதை உள்ளதுபோலவே உரை தோன்றியதற்கும்
கதை உள்ளது.

     சோமசுந்தரக் கடவுள் வழங்கிய அகப்பொருள் இலக்கணத்தைப்
பாண்டிய மன்னன் பெற்றபின், சங்கப் புலவர்களை அழைத்து, அதற்குச்
சிறந்த உரை ஒன்று எழுதுமாறு வேண்டினான். சங்கத்தில் இருந்த புலவர்கள்
எல்லாரும் உரை எழுதி, தாம் உரைத்த உரையே நல்லதென்று கூறினர்.
அதனால் நல்ல உரையினைத் தேர்ந்தெடுக்கக் காரணிகன் ஒருவனைத்
தரவேண்டும் என்று புலவர்கள் பாண்டிய மன்னனை வேண்டினர். மன்னன்,
அப்புலவர்களுக்கு நிகராவரர் யாரும் இல்லை என்று கூறிக் காரணிகளை
நியமிக்க இயலாமல் வருந்தினான். பின்னர் அப் புலவர்கள், எவ்வாறு சிறந்த
உரையைத் தேர்ந்தெடுத்தனர் என்பதைப் பின்வருமாறு களவியலுரை
கூறுகின்றது:

     “அரசனும் இது சொல்லினான்; யாம் காரணிகனைப் பெறுமாறு என்னை
கொல்? என்று சிந்திப்புழி, சூத்திரஞ் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக்
கடவுளன்றே, அவனையே காரணிகனையும் தரல் வேண்டும் எனச் சென்று
வரங்கிடத்தும் என்று வரங்கிடப்ப, இடை யாமத்து, ‘இவ்வூர் உப்பூரி
குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான் பைங்கண்ணன்,
புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தான், ஒரு மூங்கைப் பிள்ளை உளன்;
அவனை அன்னன் என்று இகழாது கொண்டு போந்து, ஆசனத்தின் மேல்
இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைத்தாற் கண்ணீர் வார்ந்து
மெய்ம்மயிர் சிலிர்க்கும், மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா
உரை கேட்டவிடத்து வாளா இருக்கும். அவன் குமார தெய்வம்; அங்கோர்
சாபத்தினால் தோன்றினான் என முக்கால் இசைத்த குரல் எல்லார்க்கும்
உடன் பாடாயிற்று. ஆக எழுந்திருந்து, தேவர் குலத்தை வலங்கொண்டு