பக்கம் எண் :

உரையாசிரியர்கள்158

போந்து, உப்பூரி குடி கிழாருழைச் சங்கமெல்லாம் சென்று, இவ்வார்த்தை
எல்லாம் சொல்லி, ‘ஐயனாவான் உருத்திர சன்மனைத் தரல் வேண்டும்’
என்று வேண்டிக் கொடு போந்து, வெளியது உடீஇ, வெண்பூச் சூட்டி,
வெண்சாந்து அணிந்து கல்மாப்பலகை யேற்றிக் கீழிழுந்து சூத்திரப் பொருள்
உரைப்ப எல்லாரும் முறையே பொருளுரைப்பக் கேட்டு வாளா இருந்து,
மதுரை மருதனிளநாகனார் உரைத்தவிடத்து ஒரோவிடத்துக் கண்ணீர்
வார்ந்து, மெய்ம்மயிர் நி்றுத்தி, பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
உரைத்தவிடத்துப் பதந்தொறுந் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப
இருந்தான்.* இருப்ப, ஆர்ப்பெடுத்து, ‘மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு!’
என்றார்.”

     இவ்வாறு உரையும் தெய்வத்தோடு தொடர்புபடுத்திச்
சிறப்பிக்கப்படுகின்றது.

முச்சங்க வரலாறு

    இவ்வுரைதான் முதன்முதலில், பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்க்க
நிறுவிய மூன்று சங்கங்களைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. ஒவ்வொரு
சங்கத்திலும் இருந்த புலவர் பெருமக்கள், அவர்கள் இயற்றிய நூல்கள்,
சங்கத்தை நிறுவி நடத்திய பாண்டிய மன்னர்கள், சங்கம் இருந்த இடம்
போன்ற செய்திகளை விரிவாகக் காணலாம். அப்பகுதி படித்து இன்புறத்
தக்கதாகும்.

     முச்சங்கங்களின் வரலாற்றினைக் கூறி, இறையனார் அகப் பொருளும்
அதன் உரையும், கடைச் சங்க காலத்தை அடுத்துத் தோன்றியவை என்று
கூறுகின்றது இவ்வுரை.

     அடியார்க்கு நல்லார்,  இவ்வுரை கூறும் முச்சங்க வரலாற்றினை
மேற்கொண்டு மேலும் சில செய்திகளைச் சேர்த்துக் கூறுகின்றார்.

சில ஐயங்கள்

    புலவர் உலகம், இறையனார் அகப்பொருளுரை பற்றிக் காலந்தோறும்
பல ஐயங்களை எழுப்பி, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளது; உரை கூறும்
பல செய்திகளை மறுக்கும் வகையில் வினாக்களை எழுப்பியுள்ளது.

     1. இறையனார் அகப்பொருள் நூலை, முதல் நூல் என்று அதன் உரை
கூறுகின்றது. ஆனால் தொல்காப்பியம் கூறும் அகப் பொருள் கருத்துகள்,
பலஇடங்களில் இடம் பெற்றுள்ளன.


 * ஊமைக்குக் காது கேட்காது. காது கேட்காத ஊமைச் சிறுவன், சிறந்த
அகப்பொருளுரையைக் கேட்டு மதிப்பிட்டான் என்பது விந்தையாக உள்ளது.