எனவே, இதனை வழிநூல் என்று கொள்ளாமல் முதல் நூல் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? 2. இந்நூல், என்மனார் புலவர் (1,54), என்ப (6,12,25,30,52), மொழிப (18) என்று பல சூத்திரங்களில் முன்னோர் கருத்தையும் மரபையும் (3) சுட்டுகின்றது. இவற்றால், இந்நூலுக்குமுன் வேறு சில அகப்பொருள் நூல்கள் இருந்திருக்கக் கூடும் என்று கருத இடமுண்டு. மேலும் இவ்வுரை, பல தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்து மேற்கோளாகக் காட்டுகின்றது. அதனால் தொல்காப்பியப் பொருளதிகாரம் இவ்வுரை தோன்றிய காலத்தில் வழங்கி வந்தது என்று உறுதியாகக் கூறலாம். ஆனால். பாண்டிய மன்னன் பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தேடிக் காணாது வருந்தினான் என்று உரை கூறுகிறது. இவ்வுரை தோன்றிய காலத்திலும் அதற்குப் பல நூற்றாண்டுகள் கழிந்து நமக்கு இக்காலத்திலும் கிடைக்கின்ற தொல்காப்பியப் பொருளதிகாரம் இந்நூல் தோன்றிய காலத்தில் மட்டும் மறைந்து விட்டிருக்குமா? 3. பொருளதிகாரம் வல்ல புலவர் ஒருவரும் இல்லாத போது, இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப் புலவர் எல்லாரும் சிறந்த உரை எழுதுதலும், தம்தம் உரையே சிறந்தது என்று பாராட்டிக்கொள்ளுதலும் எங்ஙனம் இயலும்? மேலும் அகப் பொருளுக்குச் சிறந்ததொரு உரையினைக் கூறி, தக்க மேற்கோளும் விளக்கமும் காட்டி, விழுமிய பொருளை இனிது விளக்கிய நக்கீரரைப் பொருளதிகாரம் வல்லவர் அல்லர் என்று கூற முடியுமா? 4. இவ்வுரை தோன்றிய காலத்தில், தமிழ் இலக்கணம் நான்காகப் பிரிந்துவிட்டது. தொல்காப்பியர் காலத்தில் இருந்த எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றுடன் ‘யாப்பு’ என்ற ஓர் இலக்கணமும் தோன்றி நான்கு பகுதியாகிவிட்டது. “தமிழ் நான்கு வகைப்படும்: எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் என” என்றும், “எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து” என்றும் வரும் உரைப்பகுதிகள், ‘யாப்பு’ என்ற நான்காவது பகுதி தோன்றியதை உணர்த்தும். அகப்பொருளை மட்டுமே பொருளதிகாரம் என்று இவ்வுரை குறிப்பிடுகின்றது. ஏனைய புறப் பொருளும் அணியும், மெய்ப்பாடும், மரபும் என்ன ஆயின? அகப்பொருள் ஒன்றைமட்டும் பொருளதிகாரம் என்பது பொருந்துமா? 5. இவ்வுரை பிற ஆசிரியர்களின் கருத்துகளைப் பல இடங்களில் சுட்டுகின்றது. இனி ஒரு சாரார் என்ப, இனி ஒருவன் சொல்வது, ஒரு சாரார் உரைக்குமாறு, ஒரு திறத்தார் என்ப, |