ஒருசார் ஆசிரியர் என்ப-என்று பல இடங்களில் இவ்வுரை குறிப்பிடுகின்றது. ஆதலின் இவ்வுரை தோன்றிய காலத்தில், வேறு பல புலவர்கள் இருந்தனர் என்று கருதலாம். அவர்களுடைய கருத்தும் எழுத்தும் நூல் வாயிலாகவோ உரை வழியாகவோ நாட்டில் பரவிச் செல்வாக்குப் பெற்றிருந்தன என்று கருதுவது பொருந்தாதா? 6. இவ்வுரை செய்தவர் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று உரை கூறுகின்றது. “உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மனாவான் செய்தது இந்நூற்கு உரை என்பாரும் உளர்’ என்று வேறோர் இடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நக்கீரனார் உரை எழுதி, அவர் எழுதியபடியே உரை வழங்கி வந்திருப்பின் இத்தகைய முரண்பட்ட கருத்து எழுந்திருக்குமா? காலத்தைப்பற்றி எழும் வினாக்கள் இறையனார் அகப் பொருளும் அதன் உரையும், கடைச் சங்க காலத்தை அடுத்துத் தோன்றியதாக உரை குறிப்பிடுகின்றது. அக் கருத்தை ஏற்கத் தடைகள் பல உள்ளன. 1. இந் நூலின் உரையில், வார்த்தை, சிட்டர், பிராமணன், சுவர்க்கம், சனம், குமாரசுவாமி, வாசகம், காரணிகன் போன்ற வடசொற்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இவை சங்க இலக்கியங்களில் காணமுடியாதவை. நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே என்றும், களவொழுக்கத்தினை, “இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கம்” என்றும் களவியலுரை கூறும் கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாதவை. 3. பரத்தையர் பற்றியும் பரத்தையிற் பிரிவு பற்றியும் இவ்வுரை கூறும் கருத்து விந்தையானது. பரத்தையர், தலைமகனின் பெற்றோரால் தலைமகனுக் கென்று வளர்த்து வைக்கப் பட்ட உரிமை என்றும், தக்க பருவம் வந்ததும் தலைமகனை அப்பரத்தையர் குழலும் யாழும் முழவும் கொண்டு இசை யெழுப்பி அழைப்பர் என்றும், தலைமகன் குரவரது பணி மாறுகொள்ள லாகாது’ என்று பரத்தையரைக் காணச் செல்வான் என்று கூறுகின்றது. இக்கருத்துகளையும் சங்க நூல்களில் காண இயலாது. 4. இவ்வுரை, பாண்டிக் கோவையிலிருந்து 325 பாடல்களை மேற்கோளாகத் தருகின்றது. |