அக் கோவையின் தலைவனான பாண்டிய மன்னன், நெல்வேல், வல்லம், விழிஞம், சேவூர், கடையம் முதலான இடங்களில் தன் பகைவரை வென்ற நெடுமாறன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.* இவன் செங்கோலோச்சிய காலம் (710-765) எட்டாம் நூற்றாண்டு என்பர். அப் பாண்டிய மன்னன்மீது பாடப்பட்ட கோவை தோன்றியது கி.பி. எட்டாம் நூற்றாண்டு ஆயின், அந்நூலிலிருந்து பாடல்களை மேற்கோள் காட்டும் உரையின் காலம் அதற்குப் பிற்பட்டது என்பது விளங்கும். நக்கீரர் உரை கண்டபின், ஒன்பது தலைமுறைவரை வாய்மொழியாகவே உரை வழங்கி வந்ததால், காலந்தோறும் பல கருத்துகள் உரையில் சேர்ந்திருக்கும் என்றும், வட சொற்கள் கலந்திருக்கும் என்றும், உரையை ஏட்டில் எழுதிய காலத்தில் பாண்டிக் கோவையிலிருந்து பல பாடல்களை மேற்கோளாகச் சேர்ந்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர் கருத்து இறையனார் அகப்பொருள் உரையாசிரியரைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள கருத்துகள் நம்மைமேலும் சிந்திக்கத் தூண்டுகின்றன. அவற்றைக் காண்போம்: டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்: “இறையனார் அகப் பொருளுக்கு இப்பொழுதுள்ள உரை நக்கீரரால் இயற்றப் பட்டதன்று. சிலப்பதிகாரப் பாடல்கள் அதில் மேற்கோள்களாக வந்துள்ளன. ஆகையால், நக்கீரர் அதை இயற்றியிருக்க மாட்டாரென்று நினைக்கிறேன். அவர் மாணாக்கர் பரம்பரையில் உரை மட்டும் வந்ததென்று தோற்றுகின்றது. மேற்கோள்கள் பிற்காலத்து ஒருவரால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்”.1 தஞ்சை சீனிவாசப் பிள்ளை: “ஊர் பெயர் தெரியாத ஒருவரால் களவியலுரை பிற்காலத்து எழுதப்பட்டது என்றும், நக்கீரர் எழுதியது அன்று என்றும் புலப்படும்”2 டாக்டர் மு. வரதராசனர்: “இறையனார் அறுபது சூத்திரங்களில் களவியல் என்ற அகப்பொருள் இலக்கணம் எழுதினார். நக்கீரர் என்னும் பெயர் பூண்ட பிற்காலப் புலவர் ஒருவர் இதற்கு விரிவான உரை எழுதியுள்ளார்3.” * அரிகேசரி பராங்குச வர்மன் 1. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், பக்கம் - 159. 2. தமிழ் வரலாறு 1. பக்கம் - 27. 3. கலைக் களஞ்சியம் 5, பக்கம் 484. |