பக்கம் எண் :

உரையாசிரியர்கள்164

          விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து
         வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர்
         வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்

என்றும்,

          கருங்குழற் கற்றை மருங்கு திருத்தி
         அளகமும் நுதலும் தகைபெற நீவி
         ஆகமும் அணிபெறத் தைவந்து
         குளிர்ப்பக் கூறித் தளிர்ப்ப முயங்கி

என்றும் வருகின்ற இப் பகுதிகளில், விழுமிய ஓசை, வளமான சொற்கள்,
நயமான கற்பனை, கற்கும் தோறும் இன்பம் பயக்கும் இலக்கியச் சுவை
ஆகிய யாவும் உள்ளன.

பொருளும் விளக்கமும்

    சில சொற்களின் பொருளைத் தெளிவாக இவ்வுரை விளக்குகின்றது.
‘அன்பு’ என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகின்றது.

     “குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும் போல இதுகாண் அன்பு
என்று போதத் திறந்து காட்டலாகாது. அன்புடையரான குணங்கண்ட
விடத்து இவை உண்மையான் ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக்
கொள்ளற்பாற்று. அன்புடையரான குணம் யாவையோ எனின்-சாவிற் சாதல்,
நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வு
நனி வேட்டல், பிரிவு நனியிரங்கல் என இவை”.

     இவ்வாறே இவ்வுரை தலைமகனுக்குரிய அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி
என்ற நான்கு குணங்களையும், தலைமகளுக்குரிய நாணம், மடம், அச்சம்,
பயிர்ப்பு என்ற நான்கு குணங்களையும் விளக்கிக் கூறுகின்றது (சூத்-2).

     தமிழ் என்பதற்கு, இவ்வுரை அகப்பொருள் என்று பொருள் கூறுகின்றது.
“இந்நூல் என்நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று” என்று கூறுவதால்
இக்கருத்தை அறியலாம்.

இலக்கணக் குறிப்புகள்

    இவ்வுரையில் பல இலக்கணக் குறிப்புகள் உள்ளன. பல இலக்கணத்
தொடர்களுக்கு நல்ல விளக்கம் கூறப்பட்டுள்ளன.

     பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் ஆகியவற்றை இனிது விளக்கி
அவற்றின் உட் பிரிவுகளையும் உரை கூறுகின்றது. ஐந்திணைக்கும் உரிய
முதல், கரு, உரிப் பொருள்களும், எண்வகை மணமும் விரிவாக
விளக்கப்படுகின்றன.