பக்கம் எண் :

165ஆய்வு

     ஆற்றொழுக்கு முதலிய நான்கு வகையான சூத்திரக் கிடக்கையும்
பொருள் கோளும் தக்க எடுத்துக்காட்டுகளுடன் விரித்துரைக்கப்படுகின்றன.
விற்பூட்டு, விதலை யாப்பு, பாசி நீக்கு, கொண்டு கூட்டு, ஒருசிறைநிலை என
ஐந்து வகையாகப் பொருள்கோள் கூறப்பட்டுள்ளன. இவற்றை ஏனைய
உரையாசிரியர் கூறும் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக் காணலாம். கருத்தன்,
ஏதுக் கருத்தன், கருமக் கருத்தன் ஆகியவற்றிற்கு நல்ல விளக்கம்
இவ்வுரையில் கூறப்பட்டுள்ளது.

உவமைக் களஞ்சியம்

    இவ்வுரை முழுவதும் சிறந்த உவமைகள் பல உள்ளன. வேறு
எவ்வுரையிலும் இத்தனை உவமைகள் இல்லை என்னலாம். உவமைகளின்
சிறப்பே, உரையாசிரியரின் புலமை மாண்பை வெளிப்படுத்தும் சிறந்த
கருவியாய் உள்ளது. இவ்வுரையில் உள்ள பல உவமைகளை, பிற்கால
உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளனர்.

     ‘கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போல’;
கருவமைந்த மாநகர்க்கு உருவமைந்த வாயில் மாடம் போலவும் அளப்பரிய
ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் தகைமாண்ட
நெடுஞ்சுவர்க்கு வகைமாண்டபாவை போலவும்-என்று பாயிரத்தின் சிறப்பை
விளக்க இவ்வுரையாசிரியர் கூறிய உவமைகள் நச்சினார்க்கினியர்
தொல்காப்பியப் பாயிர உரையில் எடுத்தாளுகின்றார்; ஏனைய
உரையாசிரியர்களும் மேற்கொள்ளுகின்றனர்.

     கடுத்தின்னாதானை, கட்டிபூசிக் கடுத்தீற்றியவாறு போல என்ற
உவமையால் அக்கால மருத்துவ முறையினை அறியலாம்.

     “இருட்டகத்து விளக்குக் கொண்டு புக்கால், விளக்கு வாராத முன்னரும்
இருள் நீங்காது; விளக்குவந்த பின்னரும் இருள் நீங்காது; விளக்கு வருதலும்
இருள் நீக்கமும் உடனே நிகழும். அதுபோலக் காட்சியும் ஞானமும் ஒழுக்கக்
குணங்களது தன்மையழிவும் உடனே நிகழும். விளக்கினைக் காட்சியாகக்
கொண்டு, ஞானவொழுக்கங்களை இருளாகக் கொள்க” என்று, உவமை,
பொருள் ஆகிய இரண்டையும் இனிது விளக்குகின்றார் உரையாசிரியர்.

     தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல், “வடகடலிட்ட ஒரு நுகம் ஒரு
துளை, தென்கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போலவும், வெங்கதிர்க்
கனலியும் தண்கதிர் மதியமும் தம் கதிவழுவித் தலைப் பெய்தாற் போலவும்”
அரிதின் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது (சூத்.2). “வேட்கை எல்லா
உணர்வினையும்