நீக்கித் தானேயாய் நாண்வழிக் காசு போலவும், நீர்வழி மிதவை போலவும் பான்மை வழியோடி இருவரையும் புணர்விக்கும்” என்று தக்க உவமைகளால் விளக்கப்படுகின்றது. தலைமகனைப் பிரிந்து வருந்தும் தலைமகள்நிலை பல உவமைகளுடன் புனையப்படுகின்றது. “கார் மருங்கின் மின்னுப் போலவும், நீர் மருங்கிற் கொடிபோலவும், தளிரும் முறியும் ததைந்து, குளிரும் நளிரும் கவினி எழா நின்றதோர் கவின்பெறு கொடிப் போலும் காரிகை, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவி போலக் காண ஒளி மழுங்கி, கனல் முன் இட்ட மெழுகுப்பாவை போல மனம் உருகிப் பசந்து காட்டினாள்.” தலைவியைக் காணாது வருந்தும் தலைவனைப் பாங்கன் இடித்துரைக்கும் பகுதி, பல இனிய உவமைகளுடன் பொலிகின்றது: “குன்றம் உருண்டால் குன்றி வழியடை யாகாதவாறு போலவும், யானை தொடுவுண்ணின் மூடுங்கலம் இல்லது போலவும், எம்பெருமான் நின் உள்ளம் அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடியின் வரைத்தன்றிக் கைம்மிக்கு ஓடுமேயெனின் நின்னைத் தெருட்டற் பால நீர்மையார் உளரோ?” (சூத்.3) “மூடியிருந்து வேவதோர் கொள்கலம் மூடியது திறந்த விடத்து, ஆவி எழுந்து முன் நின்ற வெப்பம் நீங்கினாற் போல” என்ற சிறந்த உவமை இருமுறை இடம் பெறுகின்றது (சூத். 18,30). ‘வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல’ (சூத். 2), ‘பள்ளத்து வழி வெள்ளம் போல’ (சூத்.3), ‘கோடையால் தெறப்பட்டு வாடி நின்ற சந்தன மரம் மழை பெற்றுத் தளிர்த்தாற் போல’ (சூத்.3), ‘கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டாற் போன்று’ (சூத்.3) ஆகிய உவமைகள் மிகச் சிறப்பாய்ப் பொருளை விளக்குகின்றன. மேற்கோள் செய்யுட்கள் இவ்வுரை, அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுள்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம்விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச்சுவை மிகுந்தவை; கற்கும் தோறும் இன்பமூட்ட வல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல் காவல்’ (சூத்.7), ‘வெள்ளாங் குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப் பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவை, தொகை நூலில் இடம் பெறாத |