பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்களாக இவை இருந்திருக்கக்கூடும். பிற உரையாசிரியர்களும் பல பழம் பாடல்களை எடுத்துக் காட்டுகின்றனர். காலத்தின் அடிச்சுவடு இவ்வுரை, பலவிடங்களில் தான் தோன்றிய காலத்து மக்களின் வாழ்க்கை, நாகரிகம், அரசியல், பழக்கவழக்கம் ஆகியவற்றைக் குறிக்கின்றது. கணவனை இழந்த பெண்டிர்க்கு அக்கால மக்களிடம் மதிப்பும் செல்வாக்கும் இல்லை என்பதையும், கைம்பெண்டிர் புறக்கணிக்கப்பட்டனர் என்பதையும் பின்வரும் உரைப்பகுதி உணர்த்தும்: “கண்டீரன்றே, குடுமிக்கூந்தலில் நறுநெய் பெய்து, கொண்டானிற் பின்னையும் இருந்து, சோறு தின்று வாழ்கின்றாள்; ஓ கொடியளே காண்’ என்று நித்தல் பழிதூற்றப்பட்டிருந்து பின்னுமே ஒருநாட் சாவல்; அதனான் இன்றே சாவல்’ எனச் சாவவும் பெறும்” (சூத்.1) அக்காலத்தில் இருந்த தண்டனைகளைக் கீழேவரும் பகுதி உணர்த்துகின்றது; “மற்று உலகத்துக் களவாயின எல்லாம், கைகுறைப்பவும் கண் சூலவும் கழுவேற்றவும் பட்டுப் பழியும் பாவமும் ஆக்கி நரகத் தொடக்கத்துத் தீக்கதிகளில் உய்க்கும்” திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் முற்காலத்தில் சிறப்புடன் விளங்கிற்று என்பதை, “ஊர் எனப்படுவது உறையூர் என்ற விடத்துப் பிறவும் ஊருண்மை சொல்லி, அவற்றுள் எல்லாம் உறையூர் சிறப்புடைமை சொல்லுப” என்ற பகுதியால் உணரலாம். அக்கால அரசியலை உணரச் சில பகுதிகள் துணை புரிகின்றன. மன்னன், அரசியல் தலைவர்களில் தகுதி வாய்ந்தவர்க்கு ‘ஏனாதி’ என்ற பட்டம் அளித்து, மோதிரம் அணிவித்தான் என்பதை, “ஏனாதி மோதிரம் செறித்தல் திருவுடையான் ஒருவன், ஏனாதி மோதிரம் செறிக்கும் அத்திரு அவன் செறிகின்ற பொழுதே உண்டாயிற்று அன்று; முற்கொண்டு அமைந்து கிடந்தது” (சூத்-2) என்ற பகுதியால் உணரலாம். ஊர்காக்கும் காவலாளர் இரவில் கை விளக்கினோடு திரிந்தனர் என்பதை, “ஊர்காத்தல் இடம் காத்தல் என இவற்றைக் கடிது காத்தும் என்று, காவலாளர் ஏமஞ் சூழ்ந்து கைவிளக்கினோடு திரிவார்” என்ற பகுதி உணர்த்தும் (சூத்-16). |