கவர்பொருள் மாக்கள் மயக்கினுக்கு இரங்கிப் பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம் தோய மடுத்தோர் தொல்காப்பியன் உரை முத்திற ஓத்தினுக்கு ஒத்தசீர்க் காண்டிகை சொல்நிலை மேற்கோள் தொகுபொருள் துணிவுடன் இயல்நூற் பாமுடிபு இணைத்து அடிகாட்டி, தலைகடை கூட்டித் தந்தனன்; பண்டே கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்; தன்னறிவு அளவையில் நல்லுரை தேவர் பன்மணிக் குறட்பால் மதிப்பிடப் பொறித்தோன்: குணகடல் செல்லூர் மணக்குடி புரியான் தண்முலை முகைஎன வெண்ணூல் சூடி அந்தணன் அறவோன் அருமறை உணர்ந்த இளம்போதி பயந்த புனிதன் இளம்பூரணன் உரை இனிது வாழ்க ஈங்கென் இப் பாயிரத்திலிருந்து இளம்பூரணர் வரலாற்றினைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்; இளம்பூரணர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை யோரமாய் உள்ள செல்லூரில் பிறந்தவர்; மணக்குடி புரியான் என்பது அவரது குடிப்பெயர்; அவர் தந்தையார் அந்தணர், அறவோர், அருமறை உணர்ந்தவர், இளம்போதி என்பவர். இளம் பூரணர் தொல்காப்பியம், கொங்குவேள் மாக்கதை, திருக்குறள் ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை இயற்றியவர். மேலே காட்டப்பட்ட செய்யுள், பிற்காலத்தில் ஒருவர் (சொர்ணம் பிள்ளை)* எழுதிவிட்ட போலிச் செய்யுள் என்பதைத் தமிழறிஞர் மு. அருணாசலம் (12-ஆம் நூற். இலக்கிய வரலாறு) தெளிவுப்படுத்தியுள்ளார். இந்தச் செய்யுள் கூறும் செய்திகள் பொய்யானவை என்பதைப் பின்வரும் சான்றுகளால் உணரலாம்: 1. தொல்காப்பியம் இளம்பூரணர் உரையைத் தேடிப் பதிப்பித்தவர் எவருக்கும் இந்தச் செய்யுள் கிடைக்கவில்லை. வேறு ஏட்டுச் சுவடிகளிலும் இது இடம் பெறவில்லை. 2. திருக்குறள் உரையாசிரியர்களைக் கூறும் பழைய வெண்பா இளம்பூரணரைக் குறிப்பிடவில்லை. * இவர் இன்னிலை என்று பெயரால் ஒரு போலி நூலையும் செங்கோன் தரைச்செவு என்ற பொய்ந்நூலையும் இயற்றி ஆராய்ச்சி உலகில் குழப்பம் உண்டாக்கியவர். |