பக்கம் எண் :

193ஆய்வு

     3.   பெருங்கதையைப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா. அதற்குக்
குறிப்புரை இருந்தமை பற்றிக் குறிப்பிடவில்லை.

     இந்தப் போலிச் செய்யுள், ஆராய்ச்சி அறிஞர் டி.வி. சதாசிவப்
பண்டாரத்தாரையும் மயக்கி விட்டது. அவர் இளம்பூரணரை மணக்குடவர்
என்று முடிவு செய்ய முயன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
1

     போலிப் புலவரின் பொய்ம்மை எவ்வளவு குழப்பத்தை
உண்டாக்கிவிட்டது!

இறையனார் அகப்பொருள் உரையாசிரியரா?

     இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்  இளம் பூரணரே என்ற
ஒரு கருத்தைத் தமிழ்ப் பெரியார் மு. இராகவஐயங்கார் (ஆராய்ச்சித்
தொகுதிக்கண்) வெளியிட்டுள்ளார். களவியல் உரை முதற்சூத்திர விளக்கத்தில்,
‘என்மனார்’ என்ற சொல்லுக்குக் கூறப்பட்டுள்ள இலக்கணக் குறிப்பு,
தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் முதற் சூத்திர உரையில் இளம்பூரணர்
கருத்துடன் ஒத்துள்ளது. களவியல் உரை ஏழாம் சூத்திரத்தில் ‘செலவினும்’
என்ற தொல்காப்பியச் சூத்திரத்திற்குத் தரும் விளக்கம் இளம்பூரணர் கூறுவது
போலவே உள்ளது. ஆதலின் இருநூலின் உரையாசிரியர்களும் ஒருவரே
என்பர். இரண்டொரு இடங்கள் ஒத்துள்ளன என்ற ஒரு சான்று இக்கருத்தை
வலிமையுள்ள தாக்கவில்லை. ஆதலின் இக்கருத்து மற்றவர்களால் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.

இல்லாத உரைப் பகுதி

    இளம்பூரணருக்குப் பின் வந்த உரையாசிரியர்கள் சிலர், அவரது
உரைகளைக் குறிப்பிடும் இடங்களில் சில இன்றுள்ள இளம்பூரணர் உரையில்
காணப்படவில்லை. மதுரைக் காஞ்சியுரையில் (40...42) நச்சினார்க்கினியர்,
“(தென் திசையை) இராவணன் ஆளுதல் பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர்
கூறிய உரையானும் உணர்க” என்று கூறுகின்றார். இங்கே நச்சினார்க்கினியர்,
உரையாசிரியர் என்று குறிப்பிடுவது இளம்பூரணரை எனின், பாயிரச் சூத்திர
உரை என்பது தொல்காப்பியப் பாயிரத்தைக் குறிக்க வேண்டும். ஆனால்
இன்றுள்ள இளம்பூரணர் பாயிரச் சூத்திர உரையில் தென்திசையை
இராவணன் ஆண்ட செய்தி கூறப்படவில்லை.


1. இலக்கிய ஆராய்ச்சிகளும் கல்வெட்டுகளும் (1961) பக். 58-61.