அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்தில் வேனிற்காதையின் தொடக்கத்தில், குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட வரலாற்றையும் அதனை அறிதற்கு உறுதுணையாய் இருந்த சான்றுகளையும் குறிப்பிடுகின்றார். பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவம் என்றார் என்க. இஃது என்னை பெறுமாறு எனின், வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்’ என்று கூறுகின்றார். இளம்பூரணர் எந்த நூலின் முகவுரையில் கூறினார் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையின் முகவுரையில் குமரிக் கண்டம் கடல்கொண்ட செய்தி இளம்பூரணரால் கூறப்படவில்லை. நச்சினார்க்கினியர், நூன்மரபில் ‘மெய்யோடியையினும்’ என்ற சூத்திர உரையில் உரையாசிரியர் கருத்தாகக் குறிப்பிடும் பகுதி இன்றுள்ள இளம்பூரணர் உரையில் இல்லை. இவ்வாறே சேனாவரையர், உரையாசிரியர் கூறியவையாகக் காட்டும் பகுதி (68, 114 சொல். சேனா. உரை) இளம்பூரணர் உரையில் இல்லை. இத்தகைய இடங்கள் எல்லாம் இளம்பூரணரைப் பற்றி ஆராய இன்னும் இடம் உண்டு என்பதனை நமக்கு அறிவிக்கின்றன. 4. சேனாவரையர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட புலவர் பெருமக்கள் ஐவர்*. இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவரும் ஒருவர்பின் ஒருவராகக் காலந்தோறும் சொல்லதிகாரத்திற்கு விரிவான உரைஎழுதி, தமிழ்மொழிக்கு தொண்டு புரிந்தனர். ஐவரில் சேனாவரையர் உரையே இன்றுவரை, புலவர்உலகம் போற்றும் பெருமையுடன் விளங்குகின்றது. சேனாவரையர்உரை தோன்றியபின், அதற்குமுன் வழங்கி வந்த இளம்பூரணர்உரை, * இயற்றியவர் பெயர் அறியப்படாத உரை ஒன்று உள்ளது. |