பக்கம் எண் :

195ஆய்வு

செல்வாக்கு இழந்தது. பயில்வார் இன்றிப் போயிற்று. ஆனால், சேனாவரையர்
உரைக்குப்பின் தோன்றிய உரைகள் யாவும் அவ்வுரை முன் நிற்கும்
ஆற்றலின்றிப் பீடு குறைந்தன; சேனாவரையர்உரை பெற்ற பெருமையும்,
போற்றுதலும் பெறாமல் நின்றன.

     சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியுள்ளார்.
இவர் வேறு நூலோ, உரையோ எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. சிவஞான
முனிவர், “சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்கு உரைசெய்தார் ஆயின்,
இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற, ஆசிரியர் கருத்துணர்ந்து
உரைப்பர். அவர், சொல்லதிகாரம் போலப் பெரும்பயன்படாமை கருதி
எழுத்திகாரத்திற்கு உரை செய்யாது ஒழிந்தமையின் பின்னுள்ளோரும்
மயங்குவராயினர்” என்று கூறுகின்றார். மேலும் சேனாவரையர், தம் உரையில்,
எழுத்ததிகாரத்தை எழுத்தோத்து (சொல். 143, 420) என்றும், பொருளதிகாரம்
(250) என்றும், உவமஇயலை அணியியல் (சொல்.440) என்றும்
குறிப்பிடுகின்றார். எழுத்ததி காரத்திலிருந்தும் பல சூத்திரங்களை எடுத்து
விளக்கிச் செல்லுகின்றார். அவ்விடங்களில், ஏனைய பகுதிக்குத் தாம் உரை
எழுதியமை பற்றிக் குறிப்பிடவில்லை.

பெயர்

    சேனாவரையர் என்ற சொல்லுக்குப் படைத்தலைவர் என்பது பொருள்.
சேனை + அரையர் எனப்பிரித்துப் படைத் தலைவர் என்று பொருள்
கொள்வர் நன்னூலின் உரையாசிரியராகிய மயிலைநாதர். சிறப்பால்பெறும்
பெயருக்கு ‘ஆசிரியன், படைத்தலைவன், சேனாவரையன்’ என்பனவற்றை
உதாரணமாகக் காட்டியுள்ளார் (நன். பெய.-19). ஆதலின், பண்டைத்
தமிழ்மன்னர்கள், தம் படைத்தலைவர்களுக்குச் ‘சேனாவரையர்’ என்ற
சிறப்புப் பெயரை இட்டுவழங்கினர் என்று அறியலாம். சேனாவரையர் என்பது
இயற் பெயராகவும் ‘கல்வெட்டுகளில் வழங்கியுள்ளது. உரையாசிரியராகிய
சேனாவரையரைப் படைத்தலைவர் என்று கொள்வதற்குச் சான்று எதுவும்
இல்லை. ஆதலின், அதனை இயற்பெயராகவே கருத வேண்டியுள்ளது. இவரது
முன்னோர்கள், படைத்தலைவர்களாக இருந்திருக்கக்கூடும். அக்காரணம் பற்றி,
இவருக்குச் சேனாவரையர் என்ற பெயர் வழங்கி இருக்கலாம்.