பக்கம் எண் :

உரையாசிரியர்கள்196

வாழ்ந்த இடம்

    இவர், தென்பாண்டி நாட்டில் வாழ்ந்தவர் என்பதற்கு இவர் உரையில்
சான்றுகள் சில உள்ளன.

     திசைச் சொற்களை விளக்கிக் கூறுமிடத்தில், “தென்பாண்டி நாட்டார்
ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி என்பதனைத்
தந்துவை என்றும் வழங்குப” என்று உதாரணம் காட்டுகின்றார் (சொல்.400).
ஏனைய நாட்டு வழக்கிற்கு எடுத்துக்காட்டு எதுவும் தரவில்லை.

     ‘பெண்மை யடுத்த மகனென் கிளவி’ (164) என்பதற்குப் ‘பெண்மகன்’
என்று உரை கூறியபின், “புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப்
பெண் மகளை மாறோக்கத்தார். இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப”
என, அச் சொல் வழங்குமிடத்தைப் பலகாலும் கேட்டு அறிந்தவர் போலத்
தெளிவாகக் குறிப்பிடுகின்றார். சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்த ஏனைய
உரையாசிரியர்கள், இவ்வாறு இடஞ்சுட்டு விளக்கவில்லை. சேனாவரையர்
குறிப்பிடும் மாறோக்கம் என்பது, தென்பாண்டிநாட்டில், கொற்கையைச்
சூழ்ந்த பகுதிக்கு முற்காலத்தில் வழங்கிய பெயராகும்.
1

     கல்வெட்டின் உதவி: மாறோக்கத்தில் எவ்வூரில் சேனாவரையர்
வாழ்ந்தார் என்பதை அறிந்துகொள்ளக் கல்வெட்டு, பெரிதும்
துணைசெய்கின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், கொற்கைக்கு அருகில்
தாமிரவருணியாற்றின் கரையில், ஆற்றூர் என்னும் ஊர் உள்ளது.
அவ்வூர்க்கோயிலில், வரையப்பட்டுள்ள கல்வெட்டுகளில் ஒன்று, ஆற்றூர்ச்
சேனாவரையர் என்பவர், ஆசிரியமாணாக்கர் முறையில் தம்
முன்னோரிடமிருந்து, தமக்குக் கிடைத்த நிலம் மனை ஆகியவற்றைத் தம்
ஊரில் உள்ள சோமநாதக் கடவுளுக்கு வழங்கிய செய்தியைக் கூறுகின்றது.
2
இக் கல்வெட்டில் கூறப்படும் சேனாவரையர், தொல்காப்பிய
உரையாசிரியராகிய சேனாவரையாக இருக்கக்கூடும் என்று அறிஞர் உலகம்
கருதுகின்றது.

     அக்கோயிலில் உள்ள வேறு இரண்டு கல்வெட்டுகளால், பின்வரும்
செய்திகள் தெரிகின்றன. சேனாவரையரின் முன்னோர் ஆற்றூரில்,
படைத்தலைவர்களின் வழித்தோன்றல்களாகவும், இடம் பொருள் ஏவல்
உடைய பெருஞ் செல்வராகவும் இருந்தனர்; அவர்கள் பரம்பரை
பரம்பரையாகப் புலமை வாய்ந்த


 1. ஆறுமுக நாவலர் குறிப்பு.

 2. MER 465 of (1929-30).