குடியினர். ஆசிரியர் மாணாக்கர் வழிமுறையாகத் தம் முன்னோரிடமிருந்து புலமைத்திறம் பற்றித் தமக்குக் கிடைத்த நிலம் மனை ஆகியவற்றையே சேனாவரையர், சிவன்கோயிலுக்கு வழங்கினார். காலம் இவ்வாறு ஆற்றூர்ச் சேனாவரையர் தம் சொத்துகளைச் சிவன் கோயிலுக்கு வழங்கிய காலம், மாறவர்மன் குலசேகர பாண்டியனது ஏழாம் ஆட்சியாண்டகிய கி.பி.1275 ஆகும். இப் பாண்டியனை எம்மண்டிலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரன் (கி.பி.1268-1311) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, சேனாவரையர், அப் பாண்டிய மன்னன் காலத்தில் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்னலாம்.1 சமயம் இவரது உரையைக் கொண்டு, இவரது சமயத்தை அறிய இயலவில்லை. ‘அரையர்’ என்ற பெயர், திருவரங்கத்தில், பள்ளி கொண்ட பெருமாள் கோயிலின்கண், திருவாய்மொழியை அபிநயம் பிடித்துப் பாடுவோருக்கு வழங்குவதால், ஒருகால் சேனாவரையர் திருமாலின் அடியவராய் இருத்தல் கூடுமோ என்று கருதுபவர் உண்டு. இவரது உரைநூலின் தொடக்கத்தில், வாழ்த்துப் பாடல்கள் நான்கு காணப்படுகின்றன. அவை முறையே விநாயகரையும், மாதொருபாகனையும், கலைமகளையும் அகத்தியரையும் வாழ்த்தி வணங்குகின்றன. அவற்றுள் முதற் பாடலாகிய, தன்தோள் நான்கின் ஒன்றுகைம் மிகூஉம் களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன்று அளியஎன் நெஞ்சே என்ற விநாயகர் வாழ்த்தை. இளம்பூரணர் மேற்கோளாகக் காட்டுகின்றார் (தொல். பொருள். செய். 50). இளம்பூரணர் சேனாவரையர்க்கு முந்தியவர் ஆதலின், இச் செய்யுளை இளம்பூரணர் உரையிலிருந்து சேனாவரையர் பெற்றுள்ளார். ஏனைய பாடல்களை இயற்றியவர் சேனாவரையரே என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. பல ஆண்டுகளாக அப் பாடல்கள், சேனாவரையர் உரையோடு சேர்ந்தே வழங்கி வருகின்றன. வேறு ஒருவர் அவற்றை இயற்றியதாக இன்றுவரை யாரும் கருதவில்லை. அவை, இடைச்செருகல் என்பதற்குச் சான்று எதுவும் இல்லை. 1. சாசனத் தமிழ்க் கவிசரிதம் (1987) பக்.108-1044. மு. இராகவ ஐயங்கார். |