ஆதலின் அவற்றைச் சேனாவரையர் இயற்றியதாகவே கருத வேண்டும். சேனாவரையர் சிவநெறிச் செல்வர் என்பதற்கு அப் பாடல்களே தக்க சான்றுகள் ஆகின்றன. முன்னர்க் குறிப்பிட்ட ஆற்றூர்க் கல்வெட்டுச் செய்தியும் அவர் சைவர் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆசிரியப்பணி சேனாவரையர் ஆசிரியப் பணி பூண்டு வாழ்ந்தவர் என்பதைக் கல்வெட்டால் மட்டுமின்றி, அவர் உரையாலும் அறியலாம். “மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்ந்துணர வைத்தல் அவர்க்கு (உரையாசிரியர்க்கு) இயல்பு” என்று முதற் சூத்திர உரை விளக்கத்திலேயே மாணாக்கரை நினைவுபடுத்துகின்றார். தம் உரையை, ஓர் ஆசிரியர் தம் மாணாக்கர் பலர்க்குப் பாடம் சொல்லும்போது மாணவர் எழுப்பும் வினாவும் ஆசிரியர் கூறும் விடையும் அமையுமாறு எழுதிச் சொல்கின்றார். என் சொல்லியவாறோ எனின் (43), யாதோ மக்கட்சுட்டு உடையவாறெனின், கொள்ளாமோ எனின் -நன்று சொன்னாய் (92). இச் சூத்திரம் வேண்டா எனின் - அஃதொக்கும் (124), உணர்த்தும்வழிச் சிறிய சொல்லுதும் (201), கூறிய கருத்து என்னை எனின்-நன்று சொன்னாய் (204), இச் சூத்திரம் வேண்டா எனின்-இதற்கு விடை ஆண்டே கூறினாம் (432) என்று சேனாவராயர் எழுதிச் செல்கின்றார். பலகாலும் மாணாக்கர்க்குப் பாடம் சொல்லிப் பழகிய பழக்கத்தால் இவ்வாறு எழுதுகின்றார். ‘பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்’ (392) என்னும் சூத்திரத்திற்கு, நல்லாசிரியர் ஒருவர் தம் மாணாக்கர்க்குக் கற்பிக்கும் முறையில் உரை எழுதுகின்றார். “உறுகால் என்புழி உறு என்னும் சொற்குப் பொருளாகிய மிகுதி என்பதன் பொருளும் அறியாத மடவோனாயின், அவ்வாறு ஒருபொருட்கிளவி கொணர்ந்து உணர்த்தல் உறாது, ‘கடுங்காலது வலி கண்டாய்’ ஈண்டு ‘உறு’ என்பதற்குப் பொருள்’ என்று தொடர் மொழி கூறியாயினும், கடுங்காலுள்ள வழிக்காட்டி யானும், அம் மாணாக்கன் உணரும் வாயில் அறிந்து உணர்த்தல் வல்லனாயின், அப்பொருள் திரிபுபடாமல் அவன் உணரும் என்றவாறு.” இவ்வுரைப் பகுதியிலிருந்து, சேனாவரையர் தம் மாணாக்கர்க்குப் பாடம் சொன்ன முறையையும், அப்போது தமக்கு |