பக்கம் எண் :

247ஆய்வு

அவ்வாறு இணங்கா உரை எழுதியதுதான் என்னையோ எனின்,
வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒரு பக்கமும்,
உரை ஒருபக்கமுமாக இணங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப்
பின்னே இருந்த நச்சினார்க்கினியர், வட மொழியில் அவர் எழுதிய
உரைகளைப் பன்முறை பார்த்து அவைபோல், தமிழிலும் உரை வழங்கப்
புகுந்து தமிழ்ச் செய்யுள் வரம்பழித்துவிட்டார் என்று உணர்க. வேதாந்த
சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச்சூத்திரத்திற்குச்
சிறிதும் ஏலா உரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும்,
தீபா (Thibaut)பண்டிதர் திருப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பானும் உணர்க”
1
என்று தம் ஆராய்ச்சித்திறன் வெளிப்படும் வகையில், உண்மையை அறிந்து
கூறுகின்றார்.

இலக்கியப் புலமையும் நினைவாற்றலும்

    பல இலக்கியங்களை நுண்ணிதின் ஆய்ந்து கற்ற நச்சினார்க்கினியர்,
நினைவாற்றலோடு ஆராய்ந்து அறிந்தவற்றை ஏற்ற இடங்களில் கூறி
விளக்குகின்றார்.

     மதுரைக் காஞ்சியும், நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றியவை. நச்சினார்க்கினியர்
அப்பாண்டிய மன்னன் வரலாற்றினை, புறநானூறு அகநானூறு முதலிய
தொகை நூல்களின் துணையால் நன்கு அறிந்து, வேண்டிய இடங்களில்
அவ்வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டி உரை எழுதுகின்றார்.

     பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில்
இருபெரு வேந்தரையும் ஐம் பெரு வேளிரையும் வென்ற செய்தியை
அகநானூறும் (175, 209) புறநானூறும் (19) விளக்கமாகக் குறிப்பிடுகின்றன.
ஆனால் மதுரைக் காஞ்சியோ, நெடுநல் வாடையோ அம்மன்னன் போரிட்ட
வரலாற்றினை விளக்கமாகக் கூறவில்லை. எனினும் அப்பாடல்களுக்கு உரை
எழுதும் நச்சினாக்கினியர் தேவையான இடங்களில் அம்மன்னனுடன்
தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு விளக்குகின்றார்.

     நெடுநல்வாடையில்,

          பலரொடு முரணிய பாசறைத் தொழில்            (188)

என்ற அடிக்குச் ‘சேரன் செம்பியன் முதலிய எழுவரோடே மாறுபட்டுப்
பொருகின்ற பாசறை இடத்துப் போர்த் தொழில்’ என்று எழுதுகின்றார்.
மதுரைக் காஞ்சியில்,


 1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை (1937) 37.