இருபெரு வேந்தரொடு வேளிர் சாய (55) என்ற அடிக்குச் ‘சேரன் சோழன் ஆகிய இருவராகிய பெரிய அரசருடனே குறுநில மன்னரும் இளைக்கும்படி’ என்று எழுதியபின், மேலும் விரிவாக விளக்குகின்றார். அரசுபட அமர் உழக்கி முரசு கொண்டு களம்வேட்ட அடுதிறல் உயர்புகழ் வேந்தே (128-130) என்ற அடிகளுக்கு “நெடுநில மன்னர் இருவரும் குறுநில மன்னர் ஐவரும் படும்படிப் போரிலே வென்று” என்று பொருள் உரைக்கின்றார். “எழுவராவர்: சேரன், செம்பியன் திதியன் எழினி எருமையூரன் இளங்கோ வேண்மான் பொருநன் என்பர்” என்றும்; “இது தலையாலங் கானத்து வென்றமை கூறிற்று” என்று கூறித் தம் வரலாற்றுப் புலமையை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறே திருமுருகாற்றுப்படையில் முருகனோடு தொடர்புடைய புராணச் செய்திகளை நினைவுடன் குறிப்பிடும் இடங்கள் பல உள்ளன. தொல்காப்பிய உரையிலும் இத்தகைய எடுத்துக் காட்டுகள் பல உள்ளன. பதிற்றுப்பத்தில் பாட்டுடைத் தலைவனாகிய பெருஞ் சேரல் இரும்பொறை, அதியமான் அஞ்சியன் தகடூரை முற்றுகையிட்ட செய்திகளை தொகை நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் (7) ‘ஒருவன் மேற் சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற்புறத்து வரும் துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்’ என்று தகடூர் முற்றுகையை நினைவூட்டுகின்றார். அகத்திணை இயலில் (54), வெள்ளி வீதியார், ஆதிமந்தியார் ஆகிய இரு பெண்பாற் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினை, அகப்பாடல்களின், துணைகொண்டு நுணுகி ஆராய்ந்து வெளியிடுகின்றார். கன்றும் உண்ணாது.....கவினே (குறுந். 27) - இது, வெள்ளி வீதியார் பாட்டு. மள்ளர் குழீஇய.....மகனே (குறுந். 31) - இது, காதலற் கெடுத்த ஆதிமந்தி பாட்டு. |