இவை தத்தம் பெயர் கூறின், புறமாம் என்று அஞ்சிவாளாது கூறினார். “ஆதிமந்தி தன் பெயரானும் காதலனாகிய ஆட்டனத்தி பெயரானும் கூறின் காஞ்சிப் பாற்படும்” என்று எழுதும் விளக்கம் சங்க இலக்கியங்களில் இவர்க்கு உள்ள புலமையையும் ஆராய்ச்சித் திறனையும் வெளிப்படுத்தும். அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (236) உள்ள “காதலற் கெடுத்த ஆதிமந்தி போல” என்ற தொடரை உரைநடையாக்கி எழுதுவதையும் நாம் இங்கே நினைக்க வேண்டும். புறத்திணையியலில் நக்கண்ணையார் வரலாற்றை எடுத்துக் காட்டியுள்ளார். முரண்பாடு இவரது உரையில் சில இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் இடங்களும் உண்டு. சிறந்த நினைவாற்றல் உடைய இவர் இங்ஙனம் முரணாக எழுதுவது நமக்கு வியப்பைத் தருகின்றது. அகத்திணையியலுள் (23) ‘ஏஎ இஃதொத்தன்’ என்னும் குறிஞ்சிக்கலிப் பாடலை (கலி.62) எடுத்துக்காட்டி, ‘தீயகாமம் இழிந்தோர்க்கு உரிமையின், இதுவும் அடியோர் தலைவராக வந்த கைக்கிளை’ என்று கூறிய இவர், கலித்தொகை உரையில் இப்பாடலைப் பெருந்திணை என்று குறிப்பிடுகின்றார். நெடுநல்வாடை-திணை ஆய்வு நெடுநல்வாடை திணை ஆராய்ச்சி அறிஞர் பலருடைய உள்ளத்தில் தோன்றி, பலப்பல வினாவிடைகளைத் தந்துவருகின்றது. இந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டு, தாமே ஒரு முடிவுக்கு வராமல் ஒதுங்கியவர் நச்சினார்க்கினியர். ‘வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்’ (176) என’ (பாண்டியனுக்கு உரிய) அடையாளப் பூ கூறினமையின் இப்பாடல் புறத்திணைக்கு உரியது என்கின்றார். பாடலுக்கு உரை எழுதப் புகுமுன் முன்னுரையாகச் சிலவற்றைக் கூறி, பாடலின் திணை துறை பற்றி ஆராய்கின்றார். ‘பாலைக்குப் புறனாகக் கூறிய வாகைத்திணையாய் அதனுள்....கூதிர்ப் பாசறையே ஆயிற்று’ என்று கூறுகின்றார். பாட்டின் இடையில் (168) ‘அம்ம-கேட்பாயாக; இஃது, இவள் வருத்தம் மிகுதி தீரவேண்டிக் கொற்றவையை நோக்கிப் பரவுகின்றவள் கூற்றாயிற்று. கேட்பாயாக என்றது கொற்றவை நோக்கி’ என்று எழுதுகின்றார். பாடலின் இறுதியில் “இப்பாட்டுத் தலையானங்கானத்துச் செரு |