ஐங்குறுநூறு ஐங்குறுநூற்றுக்குப் பழையஉரை உள்ளது. இது குறிப்புரையும் அன்று; பொழிப்புரையும் அன்று. அகத்திணை நூல்களுக்குரிய உள்ளுறை உவமம்; இறைச்சிப் பொருள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகின்றது; சிற்சில இடங்களில் அருஞ்சொற்களுக்குப் பொருள் உரைக்கின்றது; தேவையான இடங்களில் இலக்கணக் குறிப்பும் வினைமுடிபும் கூறுகின்றது. துறைகளையும் கூற்றுக்கு உரியவரையும் நன்கு விளக்குகின்றது. ஐங்குறுநூற்றின் முதற்பாட்டிற்குச் சிறந்த விளக்கம் எழுதிய இவ்வுரையாசிரியர் ஏனைய பாடல்களுக்கும் அவ்வாறு எழுதாமல் விட்டது பெரிய இழப்பாகும். முதற்பாட்டின் விளக்கமாக, “தலைவியை யாய் என்றது புலத்தற்குக் காரணமாயின உளவாகவும் அவை மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி; தோழி யாங்கள் என உளப்படுத்தது ஆயத்தாரை நோக்கி எனக் கொள்க. பூவும் புலாலும் ஒக்க விளையும் ஊர் என்றது குலமகளிரைப்போல, பொது மகளிரையும் ஒப்புக் கொண்டு ஒழுகுவான் என்பதாம். ஆதன் அவினி என்பான் சேரமான்களில் பாட்டுடைத் தலைவன்” என்று உரைக்கின்றார். எல்லாப் பாடல்களிலும் உள்ளுறைகளைத் தெளிவாக விளக்கும் இவர், 177 ஆம் பாடலில் இறைச்சிப் பொருளையும் சுட்டுகின்றார். “கன்னம் என்பது நோய்த் தணித்தற்குப் பண்ணிக் கொடுக்கும் படிமம். கெழுதகை என்பது உரிமை” (245) என்று சொல்லுக்குப் பொருளும், “வெள்ளிலோத்திரத்துக் குளிர்ச்சியையுடைய மலரை ஆற்றின் வெம்மை தீர, செல்வோர் அணிந்து செல்வர் என்றுழி வெம்மை கூறியவாறாயிற்று” (301) என்று பாட்டால் வெளிப்படும் கருத்தையும் கூறுகின்றார். இவ்வுரை சிறியதாயினும், செய்யும் உதவி பெரியது. இவ்வுரைக்கு டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் குறிப்புரை எழுதியுள்ளார். ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையும், பொ.வே. சோம சுந்தரனாரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். பதிற்றுப்பத்து பதிற்றுப்பத்திற்குப் பழையஉரை உள்ளது. இவ்வுரை பதவுரையும் அன்று; அருஞ்சொற் பொருள்உரையும் அன்று; குறிப்புரையும் அன்று. எல்லா உரை நெறிகளையும் தழுவிச் செல்லுகின்றது இவ்வுரை. |