பக்கம் எண் :

321ஆய்வு

          கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்என்று
         இத்திறத்த எட்டுத் தொகை

என்ற பழைய வெண்பா கூறுகின்றது.

     எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணைக்குத் தவிர, ஏனைய ஏழு
நூல்களுக்கும் பழங்காலத்தில் உரைகள் தோன்றியுள்ளன. குறுந்தொகைக்குப்
பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் எழுதிய உரை இருந்தது.
அகநானூற்றுக்குப் பால்வண்ண தேவனார் இயற்றிய அகவல் உரையும்
இருந்தது. ஆனால், இவ்விரு நூல்களின் பழையவுரைகள் மறைந்துபோயின.

     ஐங்குறுநூற்றிற்குப் பழைய வுரையும் பதிற்றுப்பத்திற்குப் பழைய
வுரையும், அகநானூற்றுக்குப் பழைய குறிப்புரை இரண்டும் புறநானூற்றுக்கும்
பழையவுரையும் உள்ளன. இவ்வுரைகளை இயற்றிய புலவர்களின் பெயரும்
தெரியவில்லை. “ஊர் வேண்டேன்!” என்று முற்றத்துறந்த சான்றோர்கள்
இவர்கள்.

     பரிபாடலுக்குப் பரிமேலழகர் உரையும், கலித்தொகைக்கு
நச்சினார்க்கினியர் உரையும் உள்ளன.

நற்றிணை

     நற்றிணைக்குப் பழைய உரை இல்லை. இருபதாம் நூற்றாண்டு
உரையாசிரியர்களில் ஒருவரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
நற்றிணைக்குச் சிறந்த உரையும் ஆராய்ச்சி முன்னுரையும் இயற்றிப்
பதிப்பித்தார். அண்மையில் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை, அரியதோர்
உரை விளக்கம் எழுதியுள்ளார்.

குறுந்தொகை

    குறுந்தொகைக்குப் பேராசிரியர் 380 பாடல்களுக்கும், அவர் உரை
எழுதாது விட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை
இயற்றினர் என்ற செய்தியை நச்சினார்க்கினியர் உரைப்பாயிரம் கூறுகின்றது.
இருபெரும் உரையாசிரியர்களும் இயற்றிய பழையவுரை மறைந்து போயிற்று.

     இருபதாம் நூற்றாண்டில், திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்
பெருமாள் அரங்கன் (1915-ஆம் ஆண்டில்) குறுந்தொகையைப் பதிப்பித்து
உரையும் இயற்றினார். டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரும்,
பொ.வே.சோமசுந்தரனாரும் குறுந்தொகைக்கு விளக்கவுரை எழுதியுள்ளனர்.

     இராகவ ஐயங்கார் குறுந்தொகையில் முதல் 112 பாடல்களுக்கு
விளக்கவுரை இயற்றியுள்ளார்.