பக்கம் எண் :

உரையாசிரியர்கள்320

     4. பெரும்பாணாற்றுப் படை: யாழ்ப்பாணத்து அறிஞர் அருள்
அம்பலனார் ஆய்வுரை வழங்கியுள்ளார். இதில் பாணர் வரலாறு விரிவாக
ஆராயப் பட்டுள்ளது. தமிழறிஞர் ரா. இராகவ ஐயங்கார் எழுதியுள்ள
விளக்கவுரையில், இளந்திரையன் வரலாறு வடநாட்டு மன்னர்களுடன்
இணைத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை அறிஞர் பலர் மறுத்துள்ளனர்.

     5. முல்லைப்பாட்டு: மறைமலை அடிகள் சிறந்த ஆராய்ச்சியுரை
எழுதியுள்ளார். சங்கப் பாடலின் மேன்மை, இலக்கியச் சுவை ஆகியவற்றை
நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

     6. மதுரைக்காஞ்சி: மதுரைக் காஞ்சிக்கு விளக்கமும் ஆய்வும் தனி
நூலாக எழுதப்படவில்லை.

     7. நெடுநல்வாடை: புலவர் உலகத்தைக் கவர்ந்த விழுமிய பாடல்
இது. திறனாய்வுக் கலைஞர் கோதண்ட பாணி பிள்ளை திறனாய்ந்து தெளிதல்
என்ற பெயருடன் இரண்டு நூல்கள் (சொல் நோக்கு, பொருள் நோக்கு)
எழுதியுள்ளார். செ. வேங்கடராமச் செட்டியார் ‘புனாய ஓவியம்’ என்ற
பெயரிட்டு, பாடலை நுணுகி நோக்கி நுண்பொருள் கண்டுள்ளார்.

     8. குறிஞ்சிப்பாட்டு: திறனாய்வாளர் எஸ். ஆர். மார்க்கபந்து சர்மா
விளக்கம் எழுதி, பாடலின் சுவையைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர்
தமிழண்ணல் மிகச் சிறந்த திறனாய்வு நூல் எழுதியுள்ளார்.

     9. பட்டினப்பாலை: மறைமலை அடிகள், பாடலின் அமைப்பை
வியந்து, ஓசை வேறுபாட்டில் திளைத்து, அணியழகில் ஈடுபட்டு, பொருள்
சிறப்பில் மூழ்கித் திறனாய்வு செய்துள்ளார். ரா. இராகவ ஐயங்கார், சாமி
சிதம்பரனார் ஆகிய இருவரும் எழுதியுள்ள விளக்கம் சிறந்து விளங்குகின்றன.

     10. மலைபடுகடாம்: தனியாகத் திறனாய்வு நூல் இன்னும்
தோன்றவில்லை.

     மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆகிய இரண்டும் வெளிப்படாத
புதையலாய்-பலர் கண்ணில் படாத ஓவியக் கூடமாய் - திறக்கப்படாத
அருங்காட்சியகமாய் உள்ளன.

2. எட்டுத்தொகை உரைகள் 

     எட்டுத் தொகை நூல்களை,

          நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
         ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்