மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி (முருகு-290) என்ற அடிக்கு விளக்கம் கண்டுள்ளார். இந்த வரி, அவர் நெஞ்சத்தில் ஆழப்பதிந்து நுண்பொருள் பல உணர்த்தி விரிந்த கருத்துகளைத் தந்துள்ளது. பின் வருமாறு அவர் தம் நூலைத் தொடங்குகின்றார்: “முருகன் எவன்? முருகையுடையவன் முருகன். முருகு என்றால் என்ன? முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருள்களுள், சிறப்பாகக் குறிக்கத்தக்கண நான்கு. அவை மணம் இளமை கடவுள் தன்மை அழகு என்பன. இந் நான்கு பொருள் அடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழு முதற் பொருளை அமைத்தது வியக்கத்தக்கது. இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருள்களையும் கடந்து ஒளிரும் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்குவது கண்டு, அப் பொருள்கள் முறையே உறைதற்கு இடம் பெற்றுள்ள முருகன் என்னும் சொல்லை, அவ் இறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது கூர்த்தமதி புலனாகிறது” திரு.வி.க.வின் உள்ளத்தைக் ‘கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு’ என்ற அடியும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த நூல்களேயன்றி, பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழக வெளியீடு), பத்துப் பாட்டுவளம் (லெ.ப.கரு இராமநாதன் செட்டியார்), பத்துப் பாட்டும் பைந்தமிழும் போன்ற பல திறனாய்வுக் தொகுப்புக் கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. 2. பொருநராற்றுப் படை: 1907-ஆம் ஆண்டு வா. மகாதேவ முதலியார் உரை எழுதியுள்ளார். கா. ஸ்ரீ. கோபாலாச்சாரியார் எழுதியுள்ள விளக்கவுரை சிறப்பாக உள்ளது. ‘கருவிலே திருவுடையான்’ என்று பெயரிட்டு, டாக்டர் மொ. அ. துரையரங்கனார் திறனாய்வு எழுதியுள்ளார். 3. சிறுபாணாற்றுப் படை: நான் இதற்குத் திறனாய்வு எழுதியுள்ளேன். இதில் சிறுபாணன் சென்ற வழி, ஓய்மான் நாடு, அந் நாட்டில் உள்ள ஊர்கள் ஆகியவை விளக்கம் பெற்றுள்ளன. பாடலின் இலக்கியச் சுவை பழந்தமிழர் நாகரிகச் சிறப்பு ஆகியவை நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பாணர்களின் கலைவாழ்வும், நல்லியக்கோடனின் பண்பும் போற்றப்பட்டுள்ளன. |