பக்கம் எண் :

உரையாசிரியர்கள்324

     கயிறு குறு முகவை என்பதற்கு இவர் தரும் நயஉரை மிகவும் இனியது:

     கயிறு குறு முகவை என்றது, தன்னால் நீர் தாங்குவது பெரிதன்றித் தன்
கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை” (22) என்று மிக அழகாக
விளக்குகின்றார்.

     பதிற்றுப்பத்திற்கு டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் பழைய உரையின்
கீழே குறிப்புரை எழுதியுள்ளார். ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை விளக்கவுரை
எழுதியுள்ளார். ஈழ நாட்டுத் தமிழ்ப்புலவர் அருள் அம்பலனார்
ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார்.

அகநானூறு

    அகநானூற்றுக்குப் பழைய உரை உண்டு. அதனை இயற்றியவர் பால்
வண்ணத் தேவர் என்பவர். அவர் அகவலால் உரை கண்டார் என்று
சிறப்புப்பாயிரம் கூறுகின்றது. அந்த அகவல் உரை கிடைக்கவில்லை.
மறைந்து போன உரை நூல்களுள் அதுவும் ஒன்று.

     அகநானூற்றுக்குக் குறிப்புரைகள் இரண்டு பழங்காலத்தில்
தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்று, கடவுள் வாழ்த்திற்கும் முதல்
தொண்ணூறு பாடல்களுக்கும் குறிப்புரையாய் அமைந்துள்ளது.
இவ்வுரையாசிரியர் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள அருஞ்சொற்களுக்கும்,
அரிய தொடர்களுக்கும் பொருள் எழுதுகின்றார். உள்ளுறை உவமம்,
இறைச்சிப்பொருள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். வேண்டிய இடங்களில்
சொல்முடிபு, பொருள்முடிபு, இலக்கணக் குறிப்பு, வரலாற்று நிகழ்ச்சி
ஆகியவற்றைத் தருகின்றார்.

     இவரைப் பற்றிய வரலாறு எதுவும் தெரியவில்லை.

     மற்றோர் குறிப்புரை, உரை என்ற அளவில் இல்லாமல், படித்தவர்
தம் நினைவுக்காக எழுதி வைத்த சொற்பொருளும், திணை விளக்கமும்
அமைந்த குறிப்புப்போல் உள்ளது. தொடர்ச்சியாக இக் குறிப்பு இல்லாமல்,
ஆங்காங்கே சில பாடல்களுக்கு மட்டுமே உள்ளது.

     அகநானூறு மூலமும் இவ்விரு பழையவுரைகளும் ரா. இராகவ
ஐயங்காரால் வெளியிடப்பட்டன. இராச கோபால் ஐயர் பழையவுரைக்குப்பின்
(90 பாடலுக்குப்பின்) எழுபது பாடல்களுக்கு உரை இயற்றியுள்ளார்.