ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையும் அகநானூறு முழுமைக்கும் செம்மையான உரை எழுதியுள்ளனர். புறநானூறு புறநானூற்றுக்குப் பழையவுரை உள்ளது. இவ்வுரை 266 பாடல்கள் வரை உள்ளது. இவ்வுரையாசிரியரின் வரலாறு தெரியவில்லை. இவ்வுரையின் பல்வேறு இயல்புகளை மிக நன்றாக ஆராய்ந்து டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் எழுதியுள்ளார். பழைய உரையாசிரியர் ஆற்றொழுக்காகச் செய்யுளில் சொல் கிடந்தவாறே பொருள் உரைக்கின்றார். உரைநடை மிகவும் எளிமையானது. தமக்கு முன் இருந்த மற்ற உரையாசிரியர் கருத்துக்களையும், அவர்கள் கொண்ட பாடங்களையும் பல இடங்களில் குறிக்கும் இவர் அவர்களை மறுப்பதில்லை. நயங்கூறுதல், வினைமுடிபு காட்டுதல் சொற்களை வருவித்துக் கூறல் துறைகளை விளக்குதல் போன்ற பல இயல்புகள் இவரிடம் உள்ளன. நாலடியார், திருக்குறள் போன்ற நூல்களின் செய்யுள் அடிகளை உரைநடையாக்கி எழுதுகின்றார். உலக வழக்குச் சொற்களைக் குறிக்கின்றார். உவமைகளை விளக்குகின்றார். குறிப்புப்பொருள் தருகின்றார். ஆங்காங்கே மிக அரிய இலக்கணக் குறிப்புகளைத் தருகின்றார். இவர், வேதங்களைப் பின்பற்றும் வைதிக சமயத்தவர். கடவுள் வாழ்த்துப் பாடல் உரையில், சிவபெருமானக்கு உரிய பொருள்களை, ‘திரு’ என்னும் அடைகொடுத்து, திருநுதல் திருச்சடை, திருமுடி என்கின்றார். 56 - ஆம் பாடலின் உரையில், திருமால் மேனியைத் திருமேனி என்றும், பலதேவரை நம்பி மூத்தபிரான் என்றும் முருகக் கடவுளைப் பிள்ளையார் என்றும், பிணி முகம் பிள்ளையார் ஏறும் யானை என்றும் மரபு வழுவாமல் உரைக்கின்றார். ‘நன்றாய்ந்த’ என்னும் புறப்பாட்டினுள் (166), ‘இகல் கண்டோர் மிகல் சாய்மார்’ என்பதற்கு இவ்வுரையாசிரியர், “வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி’ என்று பொருள் உரைக்கின்றார். இவ்வுரையாசிரியர் புராணக் கதைகளையும், வரலாறுகளையும் கூறுகின்றார். அவற்றை விரிவாகக் காண்போம். பாண்டியன் நெடுஞ்செழியனை, ‘எழுவர் நல்வலங் கடந்தோய்’ என்று ஒரு பாடல் (19) குறிப்பிடுகின்றது. அதற்கு |