பக்கம் எண் :

உரையாசிரியர்கள்326

இவர், ‘இரு பெருவேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய எழுவர்’ என்று உரை
எழுதுகின்றார்.
‘குழவி இறப்பினும்’ என்ற பாட்டில் (74), ‘கேளல் கேளிர்
என்றது சிறைக் கோட்டங் காவலரை’ என்று உரைக்கின்றார். 99 ஆம்
பாடலில் ஒளவையார் அதியமான் பனந்தார் சூடியுள்ளதாகப் பாடியுள்ளார்.
‘இவனுக்குப் பனந்தார் கூறியது, சேரமாற்கு உறவாதலின்’ என்று சிறந்த
முறையில் விளக்குகின்றார்.

     சிறந்த வரலாற்றுச் செய்தியையும் இவர் புராணச் செய்தியாக்கி
விடுகின்றார். 99 ஆம் பாடலில் உள்ள ‘பூவார்கா’ என்பதற்கு ‘வானோர்
இவன் (அதியமான்) முன்னோர்க்கு வரங் கொடுத்தற்கு வத்திருந்ததொரு கா’
என்றார். மேலும், 195 ஆம் பாடலில் வரும் மோரியரை, ‘சக்கரவாள சக்கர
வர்த்திகள்; விச்சாதரரும், நாகரும் என்ப’ என்று கூறி விடுகின்றார். வரலாற்று
நிகழ்ச்சியையும் புராணச் செய்தியாக்க இவர்க்கு எந்தச் சான்றுகள்
கிடைத்தனவோ, தெரியவில்லை!

     புறநானூற்றுப் பாடல்களில் வந்துள்ள உவமைகளைப் பொருளுடன்
பொருத்திக்காட்டுவதில் இவ்வுரையாசிரியர் வல்லவர்.

     புலிசேர்ந்து போகிய கல்லளை போல
     ஈன்ற வயிறோ இருவே                              (86)

என்பதற்கு, “புலி சேர்ந்து போகிய அளை போல, அவனுக்கு என்னிடத்து
உறவும் அத்தன்மைந்து என்பதாம்” என்று உரைக்கின்றார்.

     ஒளவையார் பாடிய 206-ஆம் பாடலில்,

    மரங்கொல் தச்சர் கைவல் சிறாஅர்
    மழுவுடைக் காட்டகத் தற்றே
    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

என்ற உவமையை இவ்வுரையாசிரியர் பின்வருமாறு விளக்குகின்றார்:
“பரிசிலர்க்குச் சிறாரும், கல்விக்கு மழுவும், செல்லும் திசைக்குக் காடும்,
சோற்றுக்குக் காட்டுள் மரமும் உவமையாகக் கொள்க”.

     இத்தகைய உவமை விளக்கங்களை 13, 54, 87, 102, 109, 218 ஆகிய
பாடல்களின் உரைகளில் காணலாம்.

     இவ்வுரையாசிரியர் அரிய சொற்கள் பலவற்றிற்குப் பொருள்
கூறுகின்றார். சிலவற்றைக் கீழே காண்போம்:

     அருள் - ஒன்றின் துயர்கண்டால் காரணம் இன்றித் தோன்றும்
இரக்கம் (5).