பக்கம் எண் :

353ஆய்வு

     “நாயகர் வாராக்காலும் நித்திரையில்லை; வந்தாலும் கலவியினால்
நித்திரையில்லை.”

    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை                 (1195)

    “ஒருதலைக் காமம் நன்றல்ல; இருதலைக் காமம் நன்று.”

விளக்கமும் நயமும்

    பரிதியார் சில குறளுக்கு எழுதும் உரையும் விளக்கமும் மிகவும்
போற்றத்தக்கவையாய் உள்ளன. அவ்வாறே சில தொடருக்கு இவர் தரும்
நயவுரை எண்ணி எண்ணி மகிழத்தக்கதாய் உள்ளது. அவற்றுள் சிலவற்றை
இங்கே காண்போம்:

    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோக்கிற் பவர்.              (159)

    “துறந்தார் பெரியோரானாலும் தவத்தின் பெருமையினாலே ஒருவரைச்
சாபமிடுவார்; இவன் இல்லறத்திலே இருந்தும் தனக்கு ஒருவர் செய்த குற்றம்
பொறுப்பவன் ஆதலின் பெரியவன்.”

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்                    (187)

    “இரண்டுபேர் ஒருமனமாகக் கூடியிருக்கின்ற சிநேகத்தைப்
புறஞ்சொல்லிப் பிரித்தவர் யார் என்னில் இரண்டு பேருக்கும் மனம்
பிரியப்படச் சொல்லி உறவு பண்ண அறியாதவர்.”

    தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
    அவம்செய்வார் ஆசையுட் பட்டு         (266)

    “நிலையாமை நோய் மூப்புச் சாக்காடு என்று எண்ணித் தலையாவார்
தம் கரும் செய்வர்; தம் கருமமாவன; தவம் பூசை நியதி தானம் தன்மம்
என்பன. மற்றல்லாதார் செனனவழி தேடி ஆசை விலங்கிட்டு அவம்
செய்வார்”.

    கைவேல் களிற்றொடு கோக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்                    (774)

    “மதயானை கூடப் போர்செய்து கைவேல் பறி கொடுத்த வீரன்
மெய்யிலே தைத்த வேலைப் பறித்து இந்தத் தறுவாயில் வேல் நேர்பட்டது
என்று சிரித்துச் சலிப்பிலன்.”

    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து                (776)

    “வீரன் நாள்தோறும் தன் சரீரத்தி்லே புதுமைப் புண்படாத நாள்களை
உயிருடன் வாழாத நாளாக எண்ணுவான்”.