பக்கம் எண் :

உரையாசிரியர்கள்352

     முளை என்ற தமிழ்ச் சொல்லை விட்டுவிட்டு அங்குரம் என்ற
வடசொல்லை ஆளுகின்றார் (959).

     தீயளவின்றி (947) என்னும் குறளுக்கு, “உதராக்கினி அளவையறியாமல்
கறி பதார்த்தம் உருசி யறிந்து புசித்தான்” என்று வடசொல்லை மிகுதியாக
ஆண்டு உரை எழுகின்றார்.

சொல்லும் பொருளும்

    பரிதியார், ‘வறுமையுடையோம்’ என்ற பொருளில் வறுவியோம்
என்ற சொல்லை ஆளுகின்றார் (205). சேவகன் என்ற சொல்லைப் போர்
வீரன் என்ற பொருளிலும் (763), புடவை என்ற சொல்லை உடை என்ற
பொருளிலும் (788), இராவுத்தன் என்ற சொல்லைக் குதிரை வீரன் என்ற
பொருளிலும் (814), பரியாரி என்ற சொல்லை மருத்துவன் என்ற
பொருளிலும் இவர் பயன்படுத்துகின்றார். பணம் என்ற சொல்லும் இவரால்
ஆளப்படுகின்றது (932).

சுருக்கமு் எளிமையும்

    பல குறட்பாக்களுக்கு மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் இவர்
பொருள் கூறுகின்றார். அத்தகைய இடங்களைக் கீழே காண்போம்:

    நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு                      (336)

    “நேற்றிருந்தான் இன்று செத்தான் என்னும் பெருமை உண்டு உலகுக்கு”.

    உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு                  (339)

    “நித்திரை போல மரணம்: விழிப்பது போலப்பிறப்பு என்று அறிக.”

    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு                       (782)

    “வளர் மதி ஒப்பது நல்லோர் நட்பு: தேய்பிறை ஒப்பது பொல்லா நட்பு.”

    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து                   (907)

     “பெண்ணுக்குப் பயப்படுகிற ஆண்மையினும் பெண்ணே விசேஷம்.”

    வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்                      (1179)