வைத்தியன் குணம் - கற்றவன், தெய்வசகாயம் உள்ளவன், கண் ஆனி உள்ளவன், கோவண சுத்தம் உள்ளவன் ஆக நான்கு. மருந்தின் குணம் -எளிதாய், ஒரு மருந்தாய், சுத்தமுள்ளதாய், தப்பாமல் பொறுப்பதாய் உள்ள நான்கு. பரிகாரம் பண்ணுவிப்பான் குணம் - வியாதி யாள்பவன் மேல் பத்தி, வைத்தியன் சொன்ன கிரமத்திலே வருபவன் சோம்பின்மை உள்ளவன், கொடையுள்ளவன் ஆக நான்கு. இந்த நான்கு பேருக்கும் பதினாறு குணம் வேணும் மருந்து என்னும் அதிகாரம் என்றவாறு. பரிமேலழகர் உற்றவன் வகை நான்காவன: பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன் மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவை எல்லாம் கூடிய வழியல்லது பிணி தீராமையின், இத்தொகுதியையும் ‘மருந்து’ என்றார். பரிதியார் எழுதியுள்ள விளக்கமும் பரிமேலழகர் கூறியுள்ள விளக்கமும் பெரும்பாலும் ஒத்துள்ளதை உணரலாம். வடசொல்லாட்சி பரிதியார் வடசொற்களை மிகுதியாக ஆளுகின்றார். எல்லோரும் அறிந்த நல்ல தமிழ்ச் சொல்லுக்கும் பொருள் கூறும் போது வடமொழிச் சொல்லையே பயன்படுத்துகின்றார்: வெயில் என்பதற்கு (77) ஆதித்த கிரணம் என்று பொருள் எழுதுகின்றார். விதானம் என்ற வடசொல்லை (விசனம்) கவலை, துன்பம் என்ற பொருளில் இவர் அடிக்கடி ஆளுகின்றார். வாக்குத்தோஷம் (129), வங்கிசம் (112), லஷ்மி, சேஷ்டாதேவி (167), உத்தியோகம் போன்ற வட சொற்களை எடுத்தாளுகின்றார். அறம் பொருள் இன்பம் என்று திருவள்ளுவர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களுக்கும் ‘தன்மம், அர்த்தம், காமம்’ என்ற வடசொற்களால் பொருள் கூறுகின்றார் (501). |