பக்கம் எண் :

உரையாசிரியர்கள்350

     கடவுள் வாழ்த்தில் “கோளிற் பொறியிற் குணமிலவே’ என்னும்
குறளுரையில் (9) எண்குணத்தான் என்பதற்குச் சைவ சமயச் சார்பாக
விளக்கம் தருகின்றார்:

     “எட்டுக் குணமாவன: அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த
குணம், அனந்த தெரிசனம், நாம மின்மை, கோத்திரமின்மை, அவா வின்மை,
அழியா இயல்பு என்பன” என்பது பரிதியாரின் விளக்கம்.

     இவற்றால் பரிதியார் சைவ சமயத்தினர் என்பது உறுதியாகின்றது.

பரிதியும் பரிமேலழகரும்

    பரிதியாரின் கருத்துகளைப் பரிமேலழகர், சில இடங்களில் மறுக்கின்றார்;
சில இடங்களில் என்பாரும் உளர் என்று மதித்துச் சுட்டுகின்றார்; பரிதியார்
கொண்ட வேறு பாடங்களைக் குறிப்பிடுகின்றார்.

     பரிதியாரின் கருத்துகளைப் பரிமேலழகர் அப்படியே ஏற்றுக் கொண்ட
இடங்களும் உண்டு.

     நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
     பகையும் உளவோ பிற                          (304)

என்ற குறளுக்குப் பரிதியார், “முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும்
கொல்லுகின்ற சினத்திலும்” என்று கூறிய உரைப்பகுதியைப் பரிமேலழகர்,
“முகத்தின்கண் நகையையும் மனத்தின்கண் உவகையும் கொன்று கொண்டு
எழுகின்ற சினம்” என்று தம் கருத்தாக எடுத்து அமைத்துக் கொள்ளுகின்றார்.

     உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று
     அப்பால்நாற் கூற்றே மருந்து                     (950)

என்ற குறளுக்குப் பரிதியின் விளக்கத்தைப் பரிமேலழகர் மேற்கொண்டு,
சிலவற்றை மாற்றியும் கூட்டியும் குறைத்தும், தம் உரையில் அமைத்துள்ளார்.

     இருவர் விளக்கமும் கீழே தரப்படுகின்றன:

பரிதியார்

    “வியாதி கொண்டவர்க்கும் பண்டிதர்க்கும் மருந்திற்கும் பரிகாரம்
பண்ணுவார்க்கும் நந் நான்கு குணம் உண்டு. அது ஏதெனில்,

     வியாதியாளர் குணம் - திடவான், பதார்த்தவான். கிரமத்திலே
வருபவன், கிளையுள்ளவன் ஆக நான்கு.