பக்கம் எண் :

349ஆய்வு

     1126 ஆம் குறளின் பரிதியார் உரைக்கும் பரிமேலழகர் உரைக்கும்
வேறுபாடு இல்லை.

வரலாறு

    பரிதியார் என்ற பெயர், பருதியார் எனவும் வழங்குகின்றது. அவர்
பெயரைக் கொண்டு. திருப்பருதி நியமம் என்பது இவரது ஊராய்
இருக்கலாம் என்று கருதுகின்றார் துடிசைக் கிழார். திருப்பரிதி நியமம்
என்னும் பெயருடைய ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்த நாடு செல்லும்
வழியில் ஊழ் ஊருக்குப் பக்கத்தில் உள்ளது. 1 அவ்வூரில் கோயில்
கொண்டுள்ள கடவுளின் பெயர் பருதியப்பர் என்பதாகும். பருதியப்பர் என்ற
பெயர் பருதி என்று குறுகி பரிதி என்று திரிந்து ‘ஆர்’ விகுதி சேர்ந்து
பரிதியார் என்று ஆகி இருக்கலாம்.

     பரிமேலழகர்க்கு முற்பட்ட இவர், சைவ சமயத்தவர்; வேதநெறி ஒழுகிய
அந்தணராக இருக்கலாம். வடமொழி பயின்றவர்; உலகியல் அறிவு மிக்கவர்.
உரை இயற்றிய காலத்தில் மிக முதியவராக இருந்திருக்கக் கூடும்.

சமயம்

    இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு இவரது உரையில்
தக்க சான்றுகள் பல உள்ளன. கடவுள் வாழ்த்தில் ‘கற்றதனாலாய’ என்னும்
குறளுரையில் (2) நற்றாள் என்பதற்குச் சிவன் ஸ்ரீபாதம் என்று பொருள்
உரைக்கின்றார். இறைவன் பொருள் சேர் புகழ் (5) என்பதற்குச் சிவகீர்த்தி
என்றும் அறவாழி அந்தணன் (8) என்பதற்குத் தன்மம் என்னும்
சமுத்திரமாகவுள்ள பரமேசுவரன் என்றும் பொருள் கூறுகின்றார்.

     வாய்மை அதிகாரத்தில் உள்ள ‘பொய்யாமை அன்ன’ என்னும் குறளில்
(269) ‘எல்லா அறமும் தரும்’ என்பதற்குச் சிவபுண்ணியம் எல்லாம் உண்டாம்
என்கின்றார்.

     பொருட்பாலில் ‘முறை செய்து’ என்னும் குறளுரையில் (388) ‘மக்கட்கு
இறை என்று் வைக்கப்படும்’ என்பதற்கு ‘உலகத்தை இரட்சிக்கின்ற
பரமேஸ்வரன் என்று எண்ணப்படும்’ என்கின்றார்.

     ‘யான் எனது’ என்னும் குறளுரையில் (310) துறந்தார் என்பதற்கு,
‘தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோடே துறந்தார்’ என்று பொருள்
கொள்ளுகின்றார்.


1. திருக்குறள் அழகும் அமைப்பும் (1961) பக். 177.