4. பரிமேலழகர் உரையில் ஈகை புகழ் தவம் வாய்மை துறவு ஆகிய அதிகாரங்கள், மணக்குடவர் உரையில் ‘உடைமை’ என்ற சொல்லைப்பெற்று, ஈகையுடைமை புகழுடைமை தவமுடைமை வாய்மையுடைமை துறவுடைமை என்று உள்ளன. 3. பரிதியார் திருக்குறளுக்கு உள்ள பழைய உரைகளில் மிகவும் எளிமையானது பரிதியார் உரையேயாகும். இவரது உரை பேச்சு நடையில் அமைந்து உலகு வழக்குச் சொற்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. இருப்பினும் அவற்றில் ஒரு வகை அழகும், எளிதில் பொருள் உணர்த்தும் ஆற்றலும் இருப்பதைக் காணலாம். மிகுதியாக வட சொற்கள் கலந்துள்ளன. இலக்கணச் செறிவு இல்லாத எளிய நடையில் சில இடங்களில் பிழைகளும் உள்ளன. சொற்பொழிவாற்றியதை எழுதி வைத்ததுபோல, பல இடங்கள் உள்ளன. குறளின் கருத்தை அறிந்து தம் விருப்பம் போல், கூட்டியும் குறைத்தும் பொருள் கூறுகின்றார் பரிதியார். இவர் உரையைப் பொழிப்புரை என்றோ விளக்கவுரை என்றோ கூற இயலாது. சில இடங்களில் குறளைவிடச் சுருக்கமாக உரை உள்ளது. இன்னும் இடங்களில் குறளுக்கும் உரைக்கும் தொடர்பில்லாமல் எழுதிச் செல்கின்றார். ‘குறளுக்கும் (பரிதியார்) உரைக்கும் ஒற்றுமைப்படுத்தி, கருத்து அறிந்து கொள்ளுதல் ஒரு கயிற்றலாகிய பாலத்தில் காவிரியைக் கடக்க நினைத்தலை ஒக்கும்’.1 இவரது உரையில் பாலின் தொடக்கத்தில் விளக்கவுரையோ, இயல் பிரிப்புப் பற்றிய ஆராய்ச்சியோ இல்லை. அதிகார முறை வைப்பைத் தொடர்புபடுத்திக் காட்டல், ஒரே அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள் நோக்கிப் பிரித்து அமைத்தல் ஆகிய முறைகள் இல்லை. ஏனைய உரையாசிரியர்கள், இவ்வாறு செய்யாமல் நூலின் அமைப்புப் பற்றிய ஆராய்ச்சி நிகழ்த்தியுள்ளனர். இவற்றை நோக்கும்போது பரிதியார் உரை இன்றுள்ள உரைகளில் மிகவும் முற்பட்டதோ என்று கருத இடமுண்டு. 191, 166, 167, 191, 194 ஆகிய குறள்களுக்குப் பரிதியாரும் காலிங்கரும் ஒரே வகையாய் உரை கூறியுள்ளனர். 1. திருக்குறள் அழகும் அமைப்பும் (1961). மகாவித்துவான் ச. தண்டபாணிதேசிகர். (பக்-177) |