பக்கம் எண் :

357ஆய்வு

பொருந்தாவுரை

    பரிதியார் உரையில், பல இடங்கள் மூலத்திற்கும் உரைக்கும் தொடர்பே இல்லாமல் உள்ளன. ஏடு எழுதியவராலோ வேறு எக்காரணத்தாலோ இவர் உரையில் இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளன. சில குறட்பாக்களுக்கு இவர் தரும் உரையும் விளக்கமும், சிறிதும் பொருந்தவில்லை.

    புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை                  (59)

என்ற குறளுக்குப் பரிதியார் ‘இன்னாள் பதிவிரதை என்று சொல்லும் சொல் பெறாத மடவாரை மனையாளாகவும் உடையான் தன்னை வேண்டார் முன்னே, ‘இன்னார் ரிஷபம் போலே திரிகின்றான்’ என்று ஏசுதற்கு இடமாவான் என்றவாறு” என்று எழுதியுள்ள உரை குறளின் கருத்தோடு பொருந்தவில்லை.

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்                    (475)

    “நொய்ய பீலியாகிலும் கனமாக ஏற்றினால் வண்டி அச்சு முறியும்;
அதுபோலப் பெலமில்லாதார் பலர் கூடினாலும் சத்துவமாம்; ஆகையால்
அரசன் வீரராகாத பேரையும் கனம் பெறக் கூட்டிக் கொள்வான்.”

     இக் குறள் வலியறிதல் என்னும் அதிகாரத்தில் உள்ளதாலும் எளியர்
பலர் என்று
பலரோடு பகை கொள்வான் தான் வலியனே ஆயினும் அவர்
தொக்க வழி வலி அழியும் என்னும் பொருள் தோன்ற இக்குறள்
இருப்பதாலும் பரிதியார் உரை பொருத்தமி்்ல்லை.

     ‘புணர்ச்சி மகிழ்தல்’ என்ற அதிகாரத்தில் உள்ள,

    கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
    ஒண்டொடி கண்ணே யுள               (1101)

என்ற குறளுக்குப் பரிதியார், “விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ்
கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், செண்பக
மணம் உண்டு அழிந்த வண்டும், மெய்யின்பம் கண்ட அழிந்த யானையும்
ஒவ்வொரு புலனால் அழிந்தன. ஐம்புலனும் ஓரிடத்திலே கூடியதால் என்
செய்யாது” என்று பொருள் உரைக்கின்றார்.

     இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்த தலைமகன் மனநிலையைப்
பரிதியார்உரை, வெளிப்படுத்துவதாக இல்லை! ஐம்புலனும் ஆரத்துய்த்த
தலைவன், தலைவியை வியந்து போற்றும் நிலையைப் பரிதியார் உரை
உணர்த்தவில்லை.