பக்கம் எண் :

369ஆய்வு

பெருமை, மணக்குடவர் உரைக்கு உண்டு. பரிமேலழகர் உரையை
மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர்
உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும்.

     மணக்குடவருடைய உரை, தெள்ளிய தமிழில் எளிய நடையில்
அமைந்துள்ளது. பொழிப்புரையும், சில இடங்களில் விளக்கமும் உள்ளன.
தமிழ்ப் பண்பாடு தழுவி எழுதப்பட்ட தெளிவுரை என்று இவரது உரையைப்
போற்றுவர். பிற உரையாசிரியர்களைப்போல வட நூற்  கருத்தைத் தம்
உரையில் புகுத்துவதில்லை. புதிய பாடங்களைக் கொண்டு. சொற்களைப்
பிரிக்கும் முறையில் புதுமை கையாண்டு சிறப்பாக உரை எழுதிச் செல்வது
இவரது பண்பாகும்.

     இவரிடம் ஆரவாரமோ புலமைச் செருக்கோ காணப்படவில்லை.
கற்று அறிந்து அடங்கிய அறிஞராக இவர் காணப்படுகின்றார். தமக்கு
ஐயப்பாடாக உள்ள கருத்தினைத் தயக்கத்துடனே எழுதுகின்றார். வான்சிறப்பு
என்ற அதிகாரத்திற்கு விளக்கம் எழுதும் இடத்தில், “இது கடவுட்
செய்கைத்தாதலால் அதன்பின் கூறப்பட்டது. இஃது ஈண்டுக் கூறியது என்னை
எனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமும் இனிது நடப்பது
மழை உண்டாயின் என்றற்குப் போலும், அன்றியும் காலத்தின் பொருட்டுக்
கூறினார் எனினும் அமையும்’ என்று எழுதுவது இங்கே நினைக்கத்தக்கதாகும்.

     மணக்குடவரைப்பற்றி அறிந்து கொள்ள, இவரது உரைக்கு முன்னால்
உரைச் சிறப்புப்பாயிரம் எதுவும் இல்லை. ஆதலின் மற்ற உரையாசிரியர்களை
அறிந்த அளவிற்கும் இவரைப்பற்றி அறிய இயலவில்லை.

     மணக்குடி என்ற ஊரில் பிறந்து அவ்விடத்தில் வாழ்ந்ததால்
மணக்குடியர் என்று பெயர் ஏற்பட்டு அப் பெயரே மணக்குடவர் என்று
மருவிற்று. மணக்குடி என்ற பெயருடன் தமிழகத்தில் பல ஊர்கள்
இருப்பதால் அவர் எப்பகுதியில் வாழ்ந்தார் என்றும் அறியமுடியவில்லை.
மணக்குடி என்பது, இவர் பிறந்த குடியின் பெயர் என்றும் கூறுவர்.

     திருக்குறள் உரையாசிரியர்களில் காலத்தால் முற்பட்டவர் இவர் என்ற
கருத்தும் நிலவி வருகின்றது. ஆனால் இவரே பிறர்கொண்ட பாடங்களையும்
மற்ற உரைகளையும் தம் உரையில் குறிப்பிடுவதால் இவருக்கு முன்னும்
உரையாசிரியர் சிலர் இருந்திருக்க வேண்டும் என்று அறியலாம்.