சமயக் கருத்து மணக்குடவர் உரையில் அவரது சமயத்தை அறியும் வகையில் சமயக் கருத்துக்கள் பல இடங்களில் உள்ளன. ‘ஆதிபகவன்’ (1) என்பதற்கு ஆதியாகிய பகவன் என்றும், ‘தன்னுயிர் தானறப் பெற்றானை’ என்ற குறளின் (268) விளக்கவுரையில், “உயிர் என்றது சலிப்பற்ற அறிவை; தான் என்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்காரம் அறுதல்” என்றும், ‘மலர் மீசை ஏகினான்’ என்பதற்கு (3) மலரின் மேல் நடந்தான் என்றும், ‘தாமரைக் கண்ணான் உலகு’ (1103) என்பதற்கு இந்திரனது சுவர்க்கம் என்றும் கூறுகின்றார். ‘வகுத்தான் வகுத்த வகை’ (377) என்பதற்கு விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகை என்று பொருள் உரைக்கின்றார். ‘இருள் நீங்கி இன்பம் பயக்கும்’ (352) என்ற குறளின் கீழ், “இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தி இன்பம் உண்டாமே என்றது” என்று கூறுகின்றார். ‘எதிரதாக் காக்கும்’ (429) என்ற குறளின் உரையில் “இது, முன்னை வினையால் வரும் துன்பமும், முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராது என்றது” என்றும், ‘ஒருமைக்கண்’ (398) என்ற குறளின், “இது, வாசனை (வாசனாமலம்) தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்கும் என்றது” என்றும் உரைக்கின்றார். இக் கருத்துக்கள் யாவும், மணக்குடவர், சமண சமயத்தவர் என்பதை விளக்கும். உரையின் சிறப்பியல்புகள் மணக்குடவர் உரையின் சிறப்பியல்புகள் கற்போரை மகிழச் செய்பவை. அவை, மணக்குடவரின் உரைத் திறனுக்குச் சான்று பகர்பவை. இவரது உரை பொழிப்புரையாக உள்ளது; தேவையான இடங்களில் மிகச் சுருக்கமாக விளக்கம் எழுதுகின்றார். குறளின் கருத்து இது என்று கூறுகின்றார். திருக்குறள் இருக்கும் அமைப்பிலேயே பொருள் உரைக்கின்றார். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இவற்றை நன்கு ஆராய்ந்து முன்பின் மாற்றி அமைத்து, கொண்டு கூட்டிப் பொருள் எழுதுவதி்ல்லை. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். (707) |