என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரையும் மணக்குடவர் உரையும் ஒப்பிட்டு நோக்கின் மணக்குடவர் குறள் கிடந்தவாறே பொருள் உரைப்பது புலனாகும். சில இடங்களில் தேவையான சொற்களை வருவித்து எழுதுதலும் உண்டு. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் (617) என்ற குறளின் உரையில், மடியுளாள் மாமுகடி என்பதற்கு வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பி இருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவாள்” என்று சில சொற்களை வருவித்துப் பொருள் உரைக்கின்றார். ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை’ என்ற குறளின் (481) கீழ், “இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது” என்று குறளின் கருத்தைச் சுருக்கமாகச் சுட்டுகின்றார். இவ்வாறு குறளின் கருத்தை நூல்முழுதும் சுட்டிச் சொல்லுவது இவர் வழக்கம். உவமை விளக்கம் : திருவள்ளுவர் கூறிய உவமைகளை மிகச் சில இடங்களில் விளக்குகின்றார். ‘ஏறுபோல் பீடு நடை’ என்பதில் உள்ள ஏறு நடை என்பதனை, ‘அசையும் தலையெடுப்பும் பொருந்திய நடை’ என்று விளக்குகின்றார். இந்த விளக்கம் மிகவும் அரியதாகும். ‘நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை’ என்றும் குறளின் (802) விளக்கவுரையில், “இது பேய்ச் சுரைக்காய்க்குப் பல காயம் அமைத்தாலும் இனிமை உண்டாகாதது போல, உடன்படாராயின் இனிமை உண்டாகாதாகலான் உடன்படல் வேண்டும் என்றது” என்று உவமை கூறி விளக்குகின்றார். மேற்கோள்: மிக அருகியே மேற்கோள்களை இவர் காட்டுகின்றார். ‘அரங்கின்றி வாட்டாடியற்றே’ என்ற குறளின் விளக்கவுரையில் (401) “கோட்டி கொளல், புல்லா எழுத்திற் பொருளில் வறுங்கோட்டி என்றாற்போல” என்று நாலடியாரை மேற்கோள் காட்டுகின்றார். சொல்லாட்சி: மிகக் குறைவாக இவர் வடிசொற்களையும் வழக்குச் சொற்களையும் பயன்படுத்துகின்றார். ‘கல்லா ஒருவன் தகைமை’ என்ற குறளின் (404) உரையில், “கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும் என்றவாறு” என்ற பகுதியில் ‘கிட்டி’ என்ற வழக்குச் சொல்லை ஆண்டுள்ளார். |